படம்: https://x.com/ANI/status
இந்தியா

பிரதமர் மோடி 3-வது முறையாகப் பதவியேற்பது சாதனை: ரஜினி

கிழக்கு நியூஸ்

பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாகப் பிரதமராகப் பதவியேற்பது சாதனை என நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள பிரதமர் மோடி, இன்று மாலை பிரதமராகப் பதவியேற்கிறார். மாலை 7.15 மணியளவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிரதமருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். இந்தப் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக உலக நாடுகளிலிருந்து பல்வேறு தலைவர்கள் தில்லி வந்துள்ளார்கள். தேசிய அளவிலான தலைவர்கள் தில்லி விரைந்துள்ளார்கள். காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு பதவியேற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்பதற்காக அவர் இன்று காலை சென்னையிலிருந்து தில்லி புறப்பட்டுச் சென்றார்.

புறப்படுவதற்கு முன்பு தனது இல்லத்தின் அருகே செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நேருவுக்குப் பிறகு மூன்றாவது முறை பிரதமராகப் பதவியேற்பது மோடியின் சாதனை" என்றார்.

இதைத் தொடர்ந்து, சென்னை விமான நிலையத்தில் பதவியேற்பு விழா குறித்து செய்தியாளர்கள் மீண்டும் ரஜினியிடம் கேள்வியெழுப்பினார்கள்.

"நரேந்திர மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாகப் பிரதமராகப் பதவியேற்கிறார். இது மிகப் பெரிய சாதனை. அவருக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகள். இந்தத் தேர்தலில் மக்கள் வலுவான எதிர்க்கட்சியைத் தேர்வு செய்துள்ளார்கள். இது ஜனநாயகத்துக்கு ஓர் ஆரோக்கியமான அறிகுறி. சந்திரபாபு நாயுடுவின் பதவியேற்பு விழாவுக்கும் அழைப்பு வந்துள்ளது. அதில் பங்கேற்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. மாநிலக் கட்சி அந்தஸ்தைப் பெற்றுள்ள சீமானுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்" என்றார் ரஜினிகாந்த்.