ANI
இந்தியா

முகேஷ் அம்பானி குடும்பத்திற்கான இசட் பிளஸ் பாதுகாப்பு: உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவு

நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுகளின்படி `இசட் பிளஸ் பிரிவு’ பாதுகாப்பிற்கான செலவுகளை அம்பானி குடும்பம் ஏற்று வருகிறது.

ராம் அப்பண்ணசாமி

பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு வழங்கப்படும் `இசட் பிளஸ்’ பிரிவு பாதுகாப்பை ரத்துசெய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததுடன், வழக்கை தொடர்ந்த மனுதாரருக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவரான முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினர் நால்வருக்கும் மத்திய உள்துறை அமைச்சகத்தால் `இசட் பிளஸ்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அம்பானி குடும்பத்தினருக்கான `இசட் பிளஸ் பிரிவு’ பாதுகாப்பை அனுமதிக்கும் முந்தைய உத்தரவுகளை உறுதி செய்து கடைசியாக பிப்ரவரி 2023-ல் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு குறித்து விளக்கம் கோரி, திரிபுராவைச் சேர்ந்த பிகாஷ் சாஹா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக முன்னதாக திரிபுரா உயர் நீதிமன்றத்தில் பிகாஷ் சாஹா பொது நல வழக்கு ஒன்றையும் தொடர்ந்துள்ளார். ஆனால் அது தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட இந்த வழக்கு மீதான விசாரணையை நீதிபதிகள் பிரசாந்த் குமார் மிஸ்ரா, மன்மோகன் அமர்வு மேற்கொண்டது. அம்பானி குடும்பத்தினர் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, இந்த விவகாரம் குறித்து ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுவிட்டது என்றும், மனுதாரருக்கு இதில் எந்தவிதமான சம்மந்தமும் இல்லை என்றும் வாதங்களை முன்வைத்தார்.

பிகாஷ் சாஹா சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அம்பானி குடும்பத்தினருக்கான பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் பாதுகாப்புப் படையினரை தேசிய பாதுகாப்பு நோக்கங்களுக்காக சிறப்பாகப் பயன்படுத்தலாம் என்றும், உயிருக்கான அச்சுறுத்தலை நிரந்தரமாக கருதாமல், அவ்வப்போது அதை மதிப்பாய்வு செய்யவேண்டும் என்றும் வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்ற அமர்வு, மனுதாரருக்கு கடுமையான கண்டனம் தெரிவித்ததுடன், நீதிமன்ற செயல்பாடுகளை தவறான முறையில் பயன்படுத்துவதற்காக எச்சரிக்கை விடுத்து, வழக்கை தள்ளுபடி செய்தது.

இதைத் தொடர்ந்து, முகேஷ் அம்பானி, அவரது மனைவி நீதா அம்பானி மற்றும் அவர்களது மூன்று பிள்ளைகளுக்கு வழங்கப்படும் `இசட் பிளஸ்’ பிரிவு பாதுகாப்பு இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் அமலில் இருக்கும் என்று உச்ச நீதிமன்ற அமர்வு தெளிவுபடுத்தியது.

நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுகளின்படி `இசட் பிளஸ் பிரிவு’ பாதுகாப்பிற்கான செலவுகளை அம்பானி குடும்பம்தான் ஏற்று வருகிறது.