செந்தில் பாலாஜி அமைச்சர் ஆவதைத் தடுக்கவில்லை. தனி மனுவில் நீதிமன்ற அனுமதி பெற்று அவர் அமைச்சர் ஆகலாம் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளார்கள்.
அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது செந்தில் பாலாஜி பணி நியமனங்களுக்காக பணம் வாங்கியதாகக் கடந்த 2023 ஜூன் 14 அன்று அமலாக்கத்துறை அவரைக் கைது செய்தது. இதையடுத்து, தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த செந்தில் பாலாஜி, உச்ச நீதிமன்றத்தில் ஜாமின் கோரினார். அப்போது அவருக்கு ஜாமின் வழங்கப்பட்ட நிலையில், அவர் அமைச்சராக மீண்டும் பதவியேற்றார்.
அப்போது, செந்தில் பாலாஜி அதிகாரத்தைப் பயன்படுத்தி சாட்சியங்களைக் கலைக்கக் கூடும் என்பதால் அவரது ஜாமினை ரத்து செய்ய வேண்டும் என்று அமலாக்கத்துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. அதை விசாரித்த நீதிபதி ஒகா, செந்தில் பாலாஜியைக் கடுமையாக எச்சரித்ததுடன், அமைச்சர் பதவியில் இருக்க வேண்டுமா? ஜாமின் வேண்டுமா என்பதைத் தேர்ந்தெடுக்குமாறு கூறினார். அதன் அடிப்படையில் மீண்டும் அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அதனால் அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டது.
இந்நிலையில், நீதிமன்ற தீர்ப்பில் உள்ள சில கருத்துகளை நீக்கி உத்தரவிடக் கோரி செந்தில் பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, முந்தைய தீர்ப்பை வழங்கிய நீதிபதி ஒகா, ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், இப்படி ஒரு மனுவைத் தாக்கல் செய்ய வேண்டிய அவசியம் என்ன என்று நீதிபதிகள் சூரிய காந்த் மற்றும் ஜொய்மால்ய பக்ஜி அமர்வு கேள்வி எழுப்பியது.
அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், “ஓய்வுபெற்ற நீதிபதி ஒகாவின் கருத்துகள் வாய்மொழியாக இருந்ததே தவிர, தீர்ப்பில் இடம்பெறவில்லை. செந்தில் பாலாஜி, தனது பதவியைத் தவறாகப் பயன்படுத்தி சாட்சியங்களைக் கலைக்கக் கூடும் என்பதால், நீதிபதி எச்சரிக்கை மட்டுமே விடுத்திருந்தார். அத்தகைய குற்றச்சாட்டுகள் இதுவரை பதிவாகவில்லை. அந்த வழக்கின் விசாரணை இன்னும் தொடங்கப்படவில்லை. குற்றம் சாட்டப்பட்டதால் மட்டுமே ஒருவர் அமைச்சராகப் பதவி வகிக்கக் கூடாது என்று இதனைக் கருத முடியாது. எத்தனையோ அமைச்சர்கள் குற்றம்சாட்டப்பட்டுத் தொடர்ந்து பதவியிலும் இருந்து வருகின்றார்கள்” என்று வாதிட்டார்.
இதைக் கேட்ட நீதிபதிகள், “செந்தில் பாலாஜி அமைச்சர் ஆவதை நீதிமன்றம் தடுக்கவில்லை. ஆனால், அமைச்சர் பதவி அவர் தவறாகப் பயன்படுத்துவதாக மீண்டும் புகார் எழுந்தால், ஜாமின் ரத்து செய்யப்படும். அவர் குற்றமற்றவர் என்று நிரூபிக்கப்படும் வரை, அமைச்சர் ஆக வேண்டும் என்றால், நீதிமன்றத்தில் தனியாக மனுத்தாக்கல் செய்து அனுமதி கோரலாம். முந்தைய நீதிபதியின் தீர்ப்பில் எந்தவித மாற்றமும் செய்ய விரும்பவில்லை. இந்த மனு தவறான புரிதலின் அடிப்படையில் பதியப்பட்டுள்ளது. இதை திரும்பப் பெற அனுமதிக்கிறோம்” என்று கூறினர். அதையடுத்து, மனுவைச் செந்தில் பாலாஜி தரப்பு திரும்பப் பெற்றது.