வாக்காளர் பட்டியல் முறைகேடு குறித்து ராகுல் காந்தி வைத்த குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரிய பொதுநல மனுவை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி கடந்த ஆகஸ்ட் 7 அன்று செய்தியாளர்களைச் சந்தித்து வாக்காளர் பட்டியலில் எப்படி முறைகேடு நடக்கிறது எனக் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். பெங்களூரு மத்திய நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட மஹாதேவபுரா சட்டப்பேரவைத் தொகுதியை உதாரணமாகக் கொண்டு வாக்குகள் எவ்வாறு திருடப்படுவதாகக் குற்றம்சாட்டி ராகுல் காந்தி விளக்கினார். ராகுல் காந்தியின் இந்தச் செய்தியாளர் சந்திப்பு ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியது.
இதுதொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கறிஞரும் காங்கிரஸைச் சேர்ந்தவருமான ரோஹித் பாண்டே என்பவர் வழக்கைத் தொடர்ந்தார்.
செய்தியாளர் சந்திப்பில் இணைக்கப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியலிலிருந்து எடுக்கப்பட்டவை என்று மனுதாரர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். உச்ச நீதிமன்றம் இதில் உடனடியாகத் தலையிட வேண்டிய தேவை இருப்பதாகவும் பொதுநல மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் ஜாய்மால்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இது விசாரணைக்கு வந்தது. இந்த மனுவைத் தாங்கள் ஏற்கப்போவதில்லை என்றும் வேண்டுமென்றால் மனுதாரர் இதைத் தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டுக் கொள்ளலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளார்கள்.
மனுதாரர் தரப்பில் வாதிடுகையில், "இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் முன்பு ஏற்கெனவே முறையிடப்பட்டுள்ளது, ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
Rahul Gandhi | Supreme Court | Electoral Roll Manipulation | Voter List Manipulation | Election Commission |