இந்தியா

திட்டமிட்ட ஊடுருவல்: சட்டவிரோத குடியேறிகள் குறித்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் | Illegal Immigrants

உலகின் சட்டவிரோத குடியேறிகளுக்கு இந்தியா உலகத் தலைநகர் அல்ல.

ராம் அப்பண்ணசாமி

சட்டவிரோத குடியேறிகளின் `திட்டமிட்ட ஊடுருவலை’ இந்தியா எதிர்கொள்கிறது என்றும், அவர்களின் நுழைவை எளிதாக்க `முகவர்கள் செயல்படுகிறார்கள்’ என்றும், மத்திய அரசு இன்று (ஆக. 29) உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

வங்காள மொழி பேசும் இஸ்லாமிய குடிமக்கள் தடுப்புக் காவலில் வைக்கப்படுவதாகவும், சில சந்தர்ப்பங்களில் உரிய நடைமுறைகளை பின்பற்றாமல் அவர்கள் நாடு கடத்தப்படுவதாகவும் குற்றஞ்சாட்டி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான உச்ச நீதிமன்ற விசாரணையின்போது இத்தகைய வாதத்தை மத்திய அரசு முன்வைத்தது.

மத்திய அரசு சார்பில் ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா, தேசிய பாதுகாப்பு முன்னுரிமையாக இருக்கவேண்டும் என்று வலியுறுத்தினார். `உலகின் சட்டவிரோத குடியேறிகளுக்கு இந்தியா உலகத் தலைநகர் அல்ல,’ என்று நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வில் அவர் கூறினார்.

வங்காளத்தில் பேசுவது மட்டுமே கைதுகளுக்கு வழிவகுக்கிறது என்ற வாதிகள் தரப்பு முன்வைத்த கூற்றை நிராகரித்த துஷார் மேத்தா, தடுப்புக்காவல் அல்லது நாடுகடத்தல் மொழியின் அடிப்படையில் இருக்க முடியாது என்று கருத்தை வலியுறுத்தினார்.

குறிப்பாக, பாதிக்கப்பட்ட நபர்களைவிட அமைப்புகள் எதனால் இத்தகைய மனுக்களை தாக்கல் செய்கின்றன என்ற கேள்வியை அவர் எழுப்பினார்.

அதேநேரம் அதிகாரபூர்வ நிலைப்பாட்டை தெளிவுபடுத்துமாறு மத்திய அரசாங்கத்தை உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியது. `குடியுரிமையை தீர்மானிக்க மொழி பயன்படுத்தப்படுகிறது என்ற கூற்று சரியானதா?’ என்று உச்ச நீதிமன்ற அமர்வு கேள்வி எழுப்பியது.

இந்த விஷயம் `இரு முக்கியப் பிரச்னைகள் - நாட்டின் பாதுகாப்பு மற்றும் அதன் மரபு மற்றும் பொதுவான கலாச்சாரம்’ ஆகியவற்றை தொடுகிறது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டிய உச்ச நீதிமன்றம், `தனிநபர்களுக்கு எதிரான எந்தவொரு நடவடிக்கையும் நியாயமான செயல்முறையைப் பின்பற்ற வேண்டும் அது மொழியின் அடிப்படையில் இருக்க முடியாது’ என்பதை தெளிவுபடுத்தியது.

மேற்கு வங்க புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நல வாரியமும் அதன் தலைவரான எம்.பி. சமீருல் இஸ்லாமும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் ஒடிஷா, ராஜஸ்தான், உத்தர பிரதேசம், மகாராஷ்டிரம் மற்றும் தில்லி போன்ற மாநிலங்களில் வங்காள மொழி பேசும் இஸ்லாமிய தொழிலாளர்கள் தன்னிச்சையாகக் கைது செய்யப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.

மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், பல வழக்குகளில், முறையான சரிபார்ப்பு இல்லாமல் குடிமக்கள் வங்கதேசத்திற்கு நாடு கடத்தப்பட்டதாக வாதிட்டார்.