கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள் போன்ற பொது இடங்களில் தெரு நாய்கள் நுழையாத வகையில் வேலிகளை அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் வெறிநாய்க்கடி மற்றும் ரேபிஸ் தொற்று காரணமாக உயிரிழப்புகள் அதிகரித்து வந்த நிலையில், இதுகுறித்து உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. இந்த வழக்கில் விலங்குகளின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான விதிகளின் கீழ், மாநில அரசுகள் எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது. ஆனால், முதற்கட்டமாக தில்லி, மேற்கு வங்கம், தெலங்கானா ஆகிய மூன்று அரசுகளிடமிருந்து மட்டுமே பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யாத மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளைக் கண்டித்த நீதிபதிகள், அந்த அரசுகளின் தலைமைச் செயலர்கள் நவம்பர் 3 அன்று ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டனர். அதன்படி கடந்த நவம்பர் 3 அன்று அனைத்து அரசுகளின் சார்பிலும் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
அதனடிப்படையில், வெறிநாய்க்கடி அதிகரிப்பு சம்பவங்கள் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா மற்றும் என்.வி. அஞ்சாரியா அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டதாவது:-
“அனைத்து கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள், பொது விளையாட்டு வளாகங்கள், பேருந்து நிலையங்கள், பணிமனைகள், ரயில் நிலையங்கள் போன்ற பொது இடங்களில் தெரு நாய்கள் நுழையாத வகையில் வேலிகளை அமைக்க வேண்டும். அப்பகுதிகளில் உள்ள தெரு நாய்களை அகற்றி, தடுப்பூசி செலுத்துதல் உள்ளிட்ட இனப்பெருக்க தடுப்பு விதிமுறைகளின்படி உரிய மருத்துவ நடவடிக்கைகளை மேற்கொண்டு, நாய் பாதுகாப்பகங்களில் சேர்க்க வேண்டியது அதிகாரிகளின் பொறுப்பு. பொது இடங்களில் இருந்து அகற்றப்பட்ட நாய்கள் அதே பகுதிகளில் மீண்டும் விடுவிக்கக் கூடாது.
அதேபோல் உள்ளூர் மற்றும் நெடுஞ்சாலைகளில் சுற்றித் திரியும் ஆடு, மாடுகளையும் அகற்ற வேண்டும். அவற்றை உரிய கோசாலைகளிலோ விலங்குகள் காப்பகத்திலோ சேர்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த விவகாரத்தில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலர்களும் விரைவான மற்றும் கண்டிப்பான செயல்முறைகளைப் பின்பற்றி, அடுத்த 8 வாரங்களில் நடவடிக்கைகளின் நிலைப்பாடு குறித்து தெரிவிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.
Supreme Court ordered that every educational institution, hospital, public sports complexes, bus stand and depots, railway stations, etc must be fenced properly to prevent the entry of stray dogs.