இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 200 மற்றும் 201-ன் கீழ் மாநில ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள் குறித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உச்ச நீதிமன்றத்திடம் எழுப்பிய 14 கேள்விகள் தொடர்பாக விளக்கம் கோரி, இன்று (ஜூலை 22) மத்திய அரசு மற்றும் அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்திய தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையில் நீதிபதிகள் சூர்ய காந்த், நீதிபதி விக்ரம் நாத், நீதிபதி பி.எஸ். நரசிம்ம மற்றும் நீதிபதி ஏ.எஸ். சந்துர்கர் ஆகியோர் அடங்கிய அரசியலமைப்பு அமர்வு, பிரதிவாதிகள் ஆஜராகும் வகையில் வழக்கு விசாரணையை அடுத்த செவ்வாய்க்கிழமைக்கு (ஜூலை 29) ஒத்திவைத்தது.
மேலும், ஆகஸ்ட் மாதத்தில் இந்த வழக்கை விசாரிக்க நீதிமன்றம் தயாராகவுள்ளதாக தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தெரிவித்தார். மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் ஆர். வெங்கடரமணியை நீதிமன்றத்திற்கு உதவுமாறு தலைமை நீதிபதி தலைமையிலான அரசியலமைப்பு அமர்வு கேட்டுக்கொண்டது.
மேலும், இந்த வழக்கு விசாரணையின்போது மத்திய அரசு சார்பில் தாம் ஆஜராகவிருப்பதாக கூடுதல் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா அறிவித்தார்.
தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி. வில்சன், குடியரசுத் தலைவரின் கேள்விகளில் குறிப்பிடப்பட்டுள்ள சிக்கல்களை, தமிழ்நாடு ஆளுநரின் வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பு உள்ளடக்கியுள்ளது என்று கூறினார்.
தமிழ்நாடு ஆளுநருக்கு எதிராக மாநில அரசு தொடர்ந்த வழக்கில் இரு நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு அளித்த தீர்ப்பில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 200 மற்றும் 201 பிரிவுகளின்படி, மசோதாக்களுக்கு ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்க காலக்கெடுவை நிர்ணயித்தது.
இதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்திற்கு குடியரசுத் தலைவர் 14 கேள்விகளை எழுப்பி விளக்கம் கோரினார்.