தில்லி மதுபானக் கொள்கை வழக்கில் தில்லி முன்னாள் துணை முதல்வரும், ஆம் ஆத்மி தலைவரும் மணீஷ் சிசோடியாவுக்குப் பிணை வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடவுச் சீட்டை ஒப்படைப்பது உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பிஆர் கவய் மற்றும் கேவி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
தில்லி மதுபானக் கொள்கை தொடர்புடைய வழக்கில் அப்போதைய துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியா கடந்த பிப்ரவரி 26, 2023-ல் சிபிஐ-யால் கைது செய்யப்பட்டார். இரு வாரங்களில் அமலாக்கத் துறையும் மணீஷ் சிசோடியாவைக் கைது செய்தது. இவ்விரு வழக்குகளிலிருந்தும் பிணை கோரி தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இவருடைய மனுவை தில்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் மணீஷ் சிசோடியா. இவருடைய மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பிஆர் கவய் மற்றும் கேவி விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. வழக்கு விசாரணை கடந்த 6 அன்று நிறைவடைந்த நிலையில், நீதிபதிகள் தீர்ப்பை ஒத்திவைத்தார்கள்.
சுமார் 18 மாதங்களாக சிறையிலிருந்த மணீஷ் சிசோடியாவுக்குப் பிணை வழங்கி உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. சாட்சியங்களைக் கலைக்கும் நோக்கில் செயல்படக் கூடாது, கடவுச் சீட்டை ஒப்படைக்க வேண்டும் என மணீஷ் சிசோடியாவுக்கு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
"18 மாத சிறைவாசம் இருந்திருக்கிறார். விசாரணை இன்னும் தொடங்கப்படவில்லை. வழக்கை விரைவாக விசாரித்து முடிக்க வேண்டும் என்று கோரும் மேல்முறையீடு செய்பவரின் உரிமை பறிக்கப்பட்டுள்ளது. மேல்முறையீடு செய்பவரைக் காலவரம்பின்றி சிறையிலடைப்பது என்பது அவருடைய அடிப்படை உரிமையை மீறும் செயலாகும்" என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.