இந்தியா

கெஜ்ரிவாலை முதல்வர் பதவியிலிருந்து நீக்க உத்தரவிட முடியாது: உச்ச நீதிமன்றம்

கிழக்கு நியூஸ்

தில்லி முதல்வர் பதவியிலிருந்து அரவிந்த் கெஜ்ரிவாலை நீக்கக் கோரி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

தில்லி மதுபானக் கொள்கை வழக்கில் அமலாக்கத் துறையால் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளதால், அவரைப் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபன்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, "நாங்கள் எப்படி இந்த விவகாரத்தில் தலையிட முடியும்? தேவைப்பட்டால் துணைநிலை ஆளுநர் நடவடிக்கை எடுக்கட்டும். இதில் உத்தரவு பிறப்பிக்க எந்தவித சட்டப்பூர்வ உரிமையும் கிடையாது" என்று கூறி வழக்கைத் தள்ளுபடி செய்தது.

அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியிலிருந்து நீக்கக் கோரி தில்லி உயர் நீதிமன்றத்திலும் முன்னதாக மனு தாக்கல் செய்யப்பட்டது. தில்லி உயர் நீதிமன்றமும் இந்த மனுவைத் தள்ளுபடி செய்தது.

முன்னதாக, மக்களவைத் தேர்தல் பிரசாரம் மேற்கொள்வதற்காக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால பிணை வழங்கி உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டது. ஜூன் 1 வரை இடைக்கால பிணை வழங்கப்பட்டுள்ள நிலையில், ஜூன் 2-ல் கெஜ்ரிவால் சரணடைய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பிரசாரம் மேற்கொள்வதற்காக மட்டுமே பிணை வழங்கப்பட்டுள்ளதாகவும், முதல்வர் பதவிக்கான அலுவல் பணிகளை மேற்கொள்ள அனுமதியில்லை என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.