இந்தியா

நீதிபதி யஷ்வந்த வர்மா கோரிக்கை: உச்ச நீதிமன்றம் நிராகரிப்பு | Cash Haul Hase

தலைமை நீதிபதி பிரதமருக்கும், குடியரசுத் தலைவருக்கும் கடிதம் அனுப்பியது அரசியலமைப்பிற்கு விரோதமானது அல்ல என்று நாங்கள் கருதுகிறோம்.

ராம் அப்பண்ணசாமி

நடப்பாண்டு தொடக்கத்தில் நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் பெருமளவிலான பணம் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பதவி நீக்கம் செய்ய பரிந்துரைத்த உச்ச நீதிமன்றத்தின் உள் விசாரணைக் குழுவின் அறிக்கையை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று (ஆக. 7) தள்ளுபடி செய்தது.

நீதிபதிக்கு எதிரான பதவி நீக்க நடவடிக்கைகளை நாடாளுமன்றம் விரைவுபடுத்த இந்த தீர்ப்பு வழிவகை செய்கிறது.

அன்றைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி (சஞ்சீவ் கன்னா) தன்னை பதவி நீக்கம் செய்யக்கோரி குடியரசுத் தலைவருக்குப் பரிந்துரைத்ததை தனது மனுவில் யஷ்வந்த் வர்மா எதிர்த்திருந்தார்.

அடிப்படை உரிமைகள் மீறப்படவில்லை

யஷ்வந்த வர்மாவின் மனுவை விசாரித்த நீதிபதிகள் தீபங்கர் தத்தா மற்றும் ஏ.ஜி. மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு, உள் விசாரணைக் குழு அமைக்கப்பட்ட நடவடிக்கையும், அதை தொடர்ந்து நடைபெற்ற விசாரணை நடைமுறையும் சட்டவிரோதமானது அல்ல என்று தீர்ப்பளித்தது.

`தலைமை நீதிபதியும், உள் விசாரணைக் குழுவும் செயல்முறையை கவனமாகப் பின்பற்றினர், அதேநேரம் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைப் பதிவேற்றவில்லை, அது தேவையில்லை என்று நாங்கள் கூறியுள்ளோம். ஆனால் அப்போது அதை நீங்கள் எதிர்க்காததால் எதுவும் செயல்படுத்தப்படவில்லை’ என்று உச்ச நீதிமன்றம் கூறியது.

மேலும், `தலைமை நீதிபதி பிரதமருக்கும், குடியரசுத் தலைவருக்கும் கடிதம் அனுப்பியது அரசியலமைப்பிற்கு விரோதமானது அல்ல என்று நாங்கள் கருதுகிறோம். எதிர்காலத்தில் தேவைப்பட்டால் கோரிக்கைகளை நீங்கள் எழுப்பலாம் என்று நாங்கள் சில கருத்துகளை முன்வைத்துள்ளோம்’ என்று உச்ச நீதிமன்ற அமர்வு குறிப்பிட்டது.

இந்த வழக்கு மீதான முந்தைய விசாரணையின்போது, `உள் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று கருதினால், ஆரம்பத்தில் ஏன் அதை எதிர்க்கவில்லை’ என்று உச்ச நீதிமன்ற அமர்வு நீதிபதி வர்மா தரப்பிற்கு கேள்வி எழுப்பியது.

அலஹாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் இருந்து பெருமளவு பணம் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில், அவர் இதில் சம்மந்தப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தும் விதமாக `வலுவான ஆதாரங்கள்’ உள்ளதாக உச்ச நீதிமன்றம் அமைத்த உள் விசாரணைக் குழுவின் அறிக்கை கூறப்பட்டிருந்தது.