இந்தியா

முதுநிலை நீட் தேர்வை ஒரே ஷிப்டில் நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!

இரண்டு ஷிப்டில் (இரு வேறு கேள்வித்தாள்களில்) தேர்வை நடத்துவது தன்னிச்சையான முடிவு, பல்வேறு நிலைகளில் இது சிரமத்தை உருவாக்குகிறது.

ராம் அப்பண்ணசாமி

வரும் ஜூன் 15-ல் நடைபெறவுள்ள முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வை (NEET-PG) இரண்டு ஷிப்டுகளுக்குப் பதிலாக ஒரே ஷிப்டில் நடத்த உச்ச நீதிமன்றம் இன்று (மே 30) உத்தரவிட்டுள்ளது.

முதுநிலை நீட் தேர்வை இரண்டு ஷிப்டுகளில் நடத்தும் மருத்துவ படிப்புகளுக்கான தேசிய தேர்வு வாரியத்தின் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு மீதான விசாரணையை நீதிபதிகள் விக்ரம் நாத், சஞ்சய் குமார் மற்றும் என்.வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு நடத்தியது.

இதில், இரண்டு ஷிப்ட் முறையை எதிர்த்துப் போராடிய மருத்துவ மாணவர்கள் குழுவிற்காக மூத்த வழக்கறிஞர் சாரு மாத்தூர் ஆஜரானார். நீட் விடைத்தாள்கள் மற்றும் வினாத்தாள்களில் வெளிப்படைத்தன்மை இல்லாதது தொடர்பாக தனியாக நிலுவையில் உள்ள விவகாரம் தொடர்பாக மருத்துவ மாணவர்களுக்காக வழக்கறிஞர் தன்வி துபே ஆஜரானார்.

இரண்டு ஷிப்டில் (இரு வேறு கேள்வித்தாள்களில்) தேர்வை நடத்துவது தன்னிச்சையான முடிவு என்றும், பல்வேறு நிலைகளில் சிரமத்தை உருவாக்குகிறது என்றும் விசாரணையின்போது நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. ஒரே ஷிப்டில் முதுநிலை நீட் தேர்வை நடத்த ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு தேசிய தேர்வு வாரிய அதிகாரிகளிடம் நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர்.

அப்போது, ஒரே ஷிப்டில் தேர்வை நடத்த 900 கூடுதல் மையங்களை ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும், ஜூன் 15-க்கு முன் இது சாத்தியமில்லை என்றும் தேசிய தேர்வு வாரியத்தின் வழக்கறிஞர் கூறினார்.

அதற்கு, `தற்போது நாட்டில் உள்ள தொழில்நுட்ப முன்னேற்றங்களைக் கருத்தில்கொள்ளும்போது, தேர்வை ஒரே ஷிப்டில் நடத்துவதற்கு தேவையான மையங்களை கண்டுபிடிக்க முடியவில்லை என்று சொல்வதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை’ என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்த விசாரணையின்போது, இரண்டு ஷிப்ட் முறையில் ஒரு சில மாணவர்களுக்கு மட்டுமே சிக்கல் இருப்பதாக தேசிய தேர்வு வாரியத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறியபோது, `நிவர்த்தி செய்யக்கூடிய நியாயமான கோரிக்கையை ஒரு மாணவர் முன்வைத்திருந்தாலும், அது போதும்’ என்று நீதிபதிகள் பதிலளித்தனர்.