பிஹாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மூலம் இறுதி வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட 3.66 லட்சம் பேருடைய விவரங்களைச் சமர்ப்பிக்க தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிஹாரில் சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ள நிலையில், வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொண்டது தேர்தல் ஆணையம். சிறப்பு தீவிர திருத்தம் முடிந்து இறுதி வாக்காளர் பட்டியல் செப்டம்பர் 30 அன்று வெளியிட்டது.
சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்வதற்கு முன்னதாக, ஜூன் 24, 2025 நிலவரப்படி பிஹாரில் 7.89 கோடி வாக்காளர்கள் இருந்தார்கள். ஆகஸ்ட் 1, 2025 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது. இதில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு 7.24 கோடி பேர் வாக்காளர்களாக இருந்தார்கள். செப்டம்பர் 30 அன்று வெளியான இறுதி வாக்காளர் பட்டியலில் 21.53 லட்சம் பேர் சேர்க்கப்பட்டு 3.66 லட்சம் பேர் நீக்கப்பட்டிருக்கிறார்கள். இதன்மூலம், பிஹார் வாக்காளர் பட்டியலில் மொத்தம் இடம்பெற்றுள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை 7.42 கோடியாக உள்ளது.
தேர்தல் ஆணையம் மேற்கொண்ட சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் ஜாய்மால்யா பாக்சி அமர்வு விசாரித்து வருகிறது.
கடைசியாக செப்டம்பர் 15 அன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அரசியலமைப்புப் பாதுகாப்பு அம்சங்களில் சமரசம் செய்திருந்தால், சிறப்பு தீவிர திருத்தம் முழுமையாக ரத்து செய்யப்படும் என்று உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது. பிஹாருக்குப் பிறப்பிக்கப்படும் உத்தரவு ஒட்டுமொத்த நாட்டுக்கும் பொருந்தும் என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எச்சரித்திருந்தார்கள்.
இதன்பிறகு தான் தேர்தல் ஆணையத்தின் இறுதி வாக்காளர் பட்டியல் செப்டம்பர் 30 அன்று வெளியானது. பிஹார் சட்டப்பேரவைக்கான தேர்தல் அறிவிப்பையும் தேர்தல் ஆணையம் திங்கள்கிழமை வெளியிட்டது.
இந்நிலையில், சிறப்பு தீவிர திருத்தம் தொடர்புடைய வழக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) மீண்டும் விசாரணைக்கு வந்தது. சிறப்பு தீவிர திருத்தத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட 3.66 லட்சம் வாக்காளர்களின் விவரங்களைச் சமர்ப்பிக்க தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கானது அக்டோபர் 9 அன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
அசோசியேஷன் ஃபார் டெமாக்ரடிக் ரிஃபார்ம்ஸ் சார்பில் வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து தேர்தல் ஆணையம் அடிப்படையான பதில்களைக் கொடுக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், அக்டோபர் 14 அன்று வழக்கானது மீண்டும் விரிவான விசாரணைக்கு வரும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, வழக்கு விசாரணையின்போது தேர்தல் ஆணையம் சார்பில் வாதிடுகையில், வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்ட பெயர்களில் பெரும்பாலானோர் புதிய வாக்காளர்கள் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும், நீக்கப்பட்ட வாக்காளர்கள் யாரும் புகார் தெரிவிக்கவோ முறையிடவோ இல்லை என்றும் தேர்தல் ஆணையம் வாதிட்டது.
Supreme Court | Bihar SIR | Final Voter List | Bihar | Bihar Elections | Election Commission |