ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் அனுமதிக்கப்பட்ட காலத்தைத் தாண்டியும் தலைமை நீதிபதிக்கான அரசு இல்லத்தில் வசித்து வருவதாக உச்ச நீதிமன்ற நிர்வாகம் மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் 50-வது தலைமை நீதிபதியாக டி.ஒய். சந்திரசூட் நவம்பர் 2022-ல் பொறுப்பேற்றுக்கொண்டார். 2024 நவம்பரில் டி.ஒய். சந்திரசூட் ஓய்வுபெற்றார். இவரைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா பொறுப்பேற்றுக்கொண்டார். 6 மாத காலம் இவர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தார். இந்தக் காலகட்டத்தில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் அதிகாரபூர்வ இல்லத்துக்குக் குடியேற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சீவ் கண்ணா விரும்பவில்லை.
உச்ச நீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்றுள்ள பி.ஆர். கவாயும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் அதிகாரபூர்வ இல்லத்துக்குக் குடியேற விருப்பம் தெரிவிக்காமல் அவருக்கென்று ஏற்கெனவே ஒதுக்கப்பட்டிருந்த அரசு இல்லத்திலேயே வசித்து வருகிறார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு 8-ம் நிலை அரசு இல்லத்திலிருந்து 7-ம் நிலை அரசு இல்லத்துக்குக் குடியேற வேண்டும். ஓய்வுபெற்ற பிறகு, 7-ம் நிலை அரசு இல்லத்தில் 6 மாத காலம் வாடகை இல்லாமல் வசிக்கலாம்.
ஆனால், ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் ஓய்வுபெற்ற பிறகும் 8-ம் நிலை அரசு இல்லத்திலேயே வசித்து வந்தார். இவருக்கு அடுத்தபடியாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்ற/பொறுப்பேற்றுள்ள சஞ்சீவ் கண்ணா மற்றும் பி.ஆர். கவாயும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கென்று ஒதுக்கப்பட்டுள்ள அரசு இல்லத்தில் குடியேறாததால், டி.ஒய். சந்திரசூட்டால் அனுமதிக்கப்பட்ட காலத்தைத் தாண்டியும் அந்த இல்லத்தில் வசிக்க முடிந்தது.
ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் டிசம்பர் 11, 2024 முதல் ஏப்ரல் 30, 2025 வரை உரிமக் கட்டணமாக மாதம் ரூ. 5,430-ஐ செலுத்தி வசித்துக்கொள்ளலாம் என அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா மற்றும் மத்திய அரசு அனுமதி வழங்கியது. பிறகு, ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் வாய்வழியாகக் கேட்டுக்கொண்டதன் அடப்படையில் மே 31 வரை குடியிருக்க அனுமதி நீட்டிக்கப்பட்டது. ஆனால், மேற்கொண்டு நீட்டிக்கப்படாது என்றும் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் வசம் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, ஜூன் 30 வரை அவகாசம் கோரி ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் முறையிட்டார். ஆனால், இதற்கு எந்தப் பதிலும் இல்லை. இந்தச் சூழலில் தான் கடந்த ஜூலை 1 அன்று உச்ச நீதிமன்ற நிர்வாகம் சார்பில் மத்திய அரசுக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் வசமிருந்து அரசு இல்லத்தை உடனடியாகக் காலி செய்து கொடுக்குமாறு கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.