பெங்களூரு ஐடி ஊழியர் அதுல் சுபாஷ் தற்கொலை செய்துகொண்ட வழக்கில் அவருடைய மனைவி நிகிதா சிங்கானியாவுக்கு பெங்களூரு நகர காவல் துறையினர் அழைப்பாணை அனுப்பியுள்ளார்கள்.
பிஹாரைச் சேர்ந்த 34 வயது ஐடி ஊழியர் அதுல் சுபாஷ் கடந்த திங்கள்கிழமை, பெங்களூருவிலுள்ள அவருடைய இல்லத்தில் தூக்கிட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார். உயிரிழப்பதற்கு முன் 90 நிமிடங்களுக்குக் காணொலி மற்றும் 24 பக்கத்துக்குக் கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார்.
2022-ல் அதுல் சுபாஷுக்கு எதிராக நிகிதா சிங்கானியா வரதட்சணைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் புகார் கொடுத்தார். இதன் காரணமாக அதுல் சுபாஷ் மட்டுமின்றி அதுல் சுபாஷ் பெற்றோர், சகோதரர் ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் தான், தன் மீது கொடுக்கப்பட்ட புகார்கள் அனைத்தையும் திரும்பப் பெற மனைவி நிகிதா சிங்கானியா ரூ. 3 கோடி கேட்டதாகவும் 4 வயது மகனைக் காண பார்ப்பதற்கான உரிமையாக ரூ. 30 லட்சம் கொடுக்க வேண்டும் என்றும் நிகிதா சிங்கானியா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டதாக அதுல் சுபாஷ் குற்றம்சாட்டியுள்ளார். இவர்களுடையத் துன்புறுத்தலே அதுல் சுபாஷ் மரணத்துக்குக் காரணம் என சந்தேகிக்கப்படுகிறது.
அதுல் சுபாஷ் மரணத்தைத் தொடர்ந்து, பெங்களூரு நகர காவல் துறையினர் அவருடைய மனைவி மற்றும் குடும்பத்தார் மீது வழக்குப்பதிவு செய்தார்கள்.
அடுத்தக்கட்ட நடவடிக்கையாக பெங்களூரு நகர காவல் துறையினர் நிகிதா சிங்கானியை மூன்று நாள்களில் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்பியுள்ளார்கள்.
காவல் உதவி ஆய்வாளர் சஞ்சீத் குமார் தலைமையிலான பெங்களூரு நகர காவல் துறையின் 4 பேர் கொண்ட குழு உத்தரப் பிரதேசம் சென்றுள்ளார்கள். நிகிதா சிங்கானியா இல்லத்தில் காலை 11 மணியளவில் அழைப்பாணையை ஒட்டிவிட்டுச் சென்றார்கள்.
நிகிதா சிங்கானியாவின் குடும்ப உறுப்பினர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தாலும், விசாரணைக்கு ஆஜராகுமாறு நிகிதா சிங்கானியாவுக்கு மட்டுமே நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.