இந்தியா

நீட் தொடர்பான யோசனைகள் வரவேற்கப்படுகின்றன: மத்தியக் கல்வி அமைச்சகம்

ராம் அப்பண்ணசாமி

கடந்த மே மாதம் நடந்த மருத்துவ இளநிலை படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வில் ஏற்பட்ட முறைகேடுகள் கடந்த சில வாரங்களாக வரிசையாக வெளிச்சத்துக்கு வந்தன. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு, மத்திய அரசு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது.

இதனால் நீட் தேர்வை நடத்தும் தேசியத் தேர்வு முகமையின் தலைவரை பொறுப்பிலிருந்து நீக்கியது மத்திய அரசு. மேலும் நீட் தேர்வுகள் வெளிப்படையாகவும், சீராகவும் நடைபெறுவதை உறுதி செய்ய மத்திய அரசுக்கு ஆலோசனை அளித்திட முன்னாள் இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் 7 பேர் கொண்ட உயர்மட்டக்குழு மத்திய அரசால் அமைக்கப்பட்டது.

இந்த உயர்மட்டக்குழுவின் உறுப்பினர்களாக, அரசு நிறுவனங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் போன்ற அமைப்புகளின் பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டனர். நீட் தேர்வில் சீர்திருத்தங்களைப் பரிந்துரைப்பது, தரவுகளின் பாதுகாப்பு நெறிமுறைகளை மேம்படுத்துவது, தேசிய தேர்வு முகமையின் கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகளை ஆய்வு செய்வது போன்ற நோக்கங்கள் இந்தக் குழு கொண்டுள்ளது.

ராதாகிருஷ்ணன் குழு அளிக்கும் பரிந்துரைகள் அடுத்த வருட நீட் தேர்வில் இருந்து நடைமுறைப்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்தது. மேலும் இந்த உயர்மட்டக்குழுவின் முதல் கூட்டம் ஐஐடி டெல்லியில் ஜூன் 24-ல் நடைபெற்றது.

இந்நிலையில் ஜூன் 24 முதல் ஜூலை 7 வரை, மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் இருந்து நீட் தேர்வு தொடர்பாக பரிந்துரைகள், கருத்துகள் மற்றும் யோசனைகளை வரவேற்கப்படுவதாக மத்திய கல்வி அமைச்சகம் தன் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளது.

இதற்கான பின்னூட்டம்: https://t.co/NO6rzWF3vf