PRINT-91
இந்தியா

மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: வீதியில் இறங்கிய மாணவர்கள்

ராம் அப்பண்ணசாமி

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த சில வாரங்களாக மீண்டும் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளதைக் கண்டித்து இன்று (செப்.09) அம்மாநிலத் தலைநகர் இம்பால் சாலைகளில் இறங்கிப் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள்.

பொது மக்களைக் குறி வைத்து சமீபத்தில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய ட்ரோன் வெடிகுண்டுத் தாக்குதல் மற்றும் ராக்கெட் தாக்குதல் சம்பவங்களைக் கண்டித்த மாணவர்கள், இந்தச் சம்பவங்களுக்குப் பொறுப்பேற்று மணிப்பூர் காவல்துறை இயக்குநர் மற்றும் பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோர் பதவி விலக வேண்டும் என்று போராட்டத்தில் வலியுறுத்தினர்.

நேற்று (செப்.08) மணிப்பூர் ஆளுநர் லக்‌ஷ்மண் ஆச்சாரியா தலைமையில் முதல்வர் பிரேன் சிங்குடன், 18 எம்.எல்.ஏ.க்கள் சட்ட ஒழுங்கு நிலவரம் குறித்து ஆலோசனை நடத்திய நிலையில் இன்று மாணவர்கள் சாலையில் இறங்கி போராட்டம் நடத்தியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் பிரதிநிதிகள் முதல்வர் பிரேன் சிங்கை அவரது இல்லத்தில் சந்தித்து சமீபத்தில் நடந்து வரும் சட்ட ஒழுங்கு பாதிப்பால் தங்கள் கல்விக்கு ஏற்படும் பிரச்னைகள் குறித்து எடுத்துரைத்தனர். இதைத் தொடர்ந்து அவர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனைகளைத் தீர்க்க விரைந்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதியளித்தார் முதல்வர்.

மணிப்பூரில் கிளர்ச்சியாளர்கள் மேற்கொள்ளும் ட்ரோன் தாக்குதல்களைச் சமாளிக்கும் வகையில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை ஏற்பாடு செய்துள்ளது மத்திய தொழில் பாதுகாப்புப் படை. மிக முக்கியமாக ட்ரோன்களைச் சுட்டு வீழ்த்தும் வகையிலான துப்பாக்கிகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.