இந்தியா

நீட் தேர்வு முடிவுகள் மீது விசாரணை மேற்கொள்ளப்படும்: உயர்கல்வித்துறை செயலர்

ராம் அப்பண்ணசாமி

கடந்த மே 5 ல் நாடு முழுவதும் நடந்த மருத்துவ இளநிலை படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வின் முடிவுகள் ஜூன் 4 ல் வெளியானது. இந்தத் தேர்வில் மொத்தம் 67 தேர்வர்கள் முதலிடம் பிடித்தனர். இந்த 67 தேர்வர்களில் 6 தேர்வர்கள் ஹரியானா மாநிலத்தின் ஒரே மையத்தில் தேர்வெழுதியதாக வெளியான தகவலால் சர்ச்சை கிளம்பியது.

மேலும் பல தேர்வர்கள் 718, 719 என மதிப்பெண்கள் பெற்றதும் சர்ச்சையாகி உள்ளது. 180 கேள்விகள் கேட்கப்படும் நீட் தேர்வில், சரியான பதில் ஒவ்வொருக்கும் 4 மதிப்பெண் வழங்கப்படும், அதே நேரம் தவறான கேள்வி ஒவ்வொருக்கும் 1 மதிப்பெண் கழிக்கப்படும். உதாரணத்துக்கு 180 கேள்விகளில், ஒரு தேர்வர் 179 கேள்விகளுக்கு சரியாக பதிலளித்து 1 கேள்வி தவறாக பதிலளித்தால் அந்தத் தேர்வருக்கு 715 மதிப்பெண்கள் கிடைக்கும்.

எனவே 718, 719 என தேர்வர்கள் மதிப்பெண் பெற்றது எப்படி? எனப் பலரும் தங்கள் சமூக வளைதளப்பக்கங்களில் கேள்வி எழுப்பினர். இதனைத் தொடர்ந்து இந்த சர்ச்சைகளுக்கு விளக்கம் அளித்த தேசியத் தேர்வாணயம், `நேரமின்மை பிரச்சனையால் 1563 தேர்வர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டதாகத்’ தெரிவித்தது. `எந்த அடிப்படையில் 1563 தேர்வர்களுக்கு மட்டும் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டது என’ தேர்வாணயத்தின் பதிலை முன்வைத்துப் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

இது பற்றி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட தேர்வர் ஒருவர், ’இந்த முறை 67 தேர்வர்கள் முதலிடம் பிடித்துள்ளது வினாத்தாள் கசிந்திருக்கக்கூடும் என்ற சந்தேகத்தைக் கிளப்பியுள்ளது. இந்தத் தேர்வை தேசியத் தேர்வாணையம் ரத்து செய்ய வேண்டும்’ எனப் பதிவிட்டுள்ளார். இவரைப் போலவே பல மாணவர்களும் இந்த சர்ச்சை குறித்து காட்டத்துடன் தினமும் பதிவிட்டு வருகின்றனர்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட எதிர்கட்சித் தலைவர்கள் நீட் தேர்வில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரிக்க வேண்டும் என கடந்த சில நாட்களாக கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் நீட் தேர்வு சர்ச்சைகள் குறித்து 2 மணியளவில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய உயர்கல்வித்துறை செயலாளர் சஞ்சய் மூர்த்தி, `நீட் தேர்வு முழு வெளிப்படைத்தன்மையுடன் நடைபெற்றது. இதில் முறைகேடுகள் நடந்திருக்க வாய்ப்பில்லை’ எனத் தெரிவித்தார். மேலும் நீட் தேர்வு முடிவுகளை ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டு ஒரு வாரத்தில் அறிக்கை அளிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.