தேடுதல் பணியில் பாதுகாப்பு வீரர் ANI
இந்தியா

பயங்கரவாதிகளுக்குக் கடுமையான பதிலடி தரப்படும்: ராஜ்நாத் சிங்

பஹல்காம் தாக்குதல் சம்பவம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் கூட்டம் இன்னும் சற்று நேரத்தில் கூடவுள்ளது.

கிழக்கு நியூஸ்

பஹல்காம் தாக்குதலுக்கு கடுமையான பதிலடி தரப்படும் என மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்தில் பஹல்காம் என்ற சுற்றுலாத் தலத்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்துள்ளார்கள். இந்தச் சம்பவம் தொடர்பாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படைத் தளபதி மற்றும் முப்படைகளின் தளபதிகள் ஆகியோருடன் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் சுமார் இரண்டரை மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.

இந்தத் தாக்குதலுக்குக் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் ராஜ்நாத் சிங் பேசியதாவது:

"இந்தச் செயலுக்குக் காரணமானவர்களுக்கு கடுமையான பதிலடி தரப்படும். மிகக் கொடூரமான செயலில் ஈடுபட்டவர்களை மட்டும் தண்டிக்க மாட்டோம். இந்தச் சதித் திட்டத்தின் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பதைக் கண்டறிந்து அவர்களையும் குறிவைப்போம். தாக்குதல் நடத்தியவர்கள் மற்றும் திட்டம் தீட்டியவர்கள் குறிவைக்கப்படுவார்கள்.

தேவையான உரிய நடவடிக்கைகள் ஒவ்வொன்றாக எடுக்கப்படும். பயங்கரவாதத்துக்கு அஞ்சும் நாடு இந்தியா கிடையாது" என்று ராஜ்நாத் சிங் பேசினார்.

பஹல்காம் தாக்குதல் சம்பவம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் கூட்டம் இன்னும் சற்று நேரத்தில் கூடவுள்ளது. ஜம்மு-காஷ்மீரில் நிலவும் சூழல், அடுத்தக்கட்ட நடவடிக்கை உள்ளிட்டவை குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.