ANI
இந்தியா

முன்பதிவில்லா பயணிகள் மீது நடவடிக்கை: ரயில்வே அமைச்சர் வலியுறுத்தல்!

ராம் அப்பண்ணசாமி

அண்மைக் காலங்களில் நாடு முழுவதும் முன்பதிவு செய்யப்பட்ட ரயில் பெட்டிகளில் தகுந்த பயணச்சீட்டுகள் இல்லாத நபர்கள் பயணம் செய்யும் போக்கு அதிகரித்துள்ளது. இந்தச் சம்பவங்கள் பற்றிய காணொளிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பலரும் மத்திய அரசுக்குத் தங்களின் கண்டனங்களைத் தெரிவித்து வந்தனர்.

இது குறித்து ரயில்வே பொது மேலாளர்களுடன் காணொளி வாயிலாக உரையாடிய மத்திய இரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், `நடந்த சம்பவங்கள் பற்றி ‘ரயில் மதாத்’ செயலியில் அதிக புகார்கள் வந்துள்ளன, இந்தப் போக்கைத் தடுத்து நிறுத்த அந்தந்த ரயில்வே மண்டலங்களில் தகுந்த முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’ என அறிவுறுத்தினார்.

`முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் தகுந்த பயணச்சீட்டு இல்லாமல் பயணிப்பவர்களுக்கு அபராதம் விதித்து இறக்கிவிடுமாறு ரயில்வே பணியாளர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இது போன்ற புகார்கள் அதிகம் வரும் தொலைதூர ரயில்களின் பெட்டிகளைக் கண்காணிக்குமாறு ரயில்வே போலீஸாரிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

சில நாட்களுக்கு முன்பு, சென்னை சென்ட்ரல் – ஹவுரா அதிவிரைவு ரயிலில், முன்பதிவு செய்யப்பட்ட ரயில் பெட்டிகளை முன்பதிவில்லா பயணச்சீட்டு வைத்திருந்த பயணிகள் ஆக்கிரமித்துக் கொண்டதால், தகுந்த பயணச்சீட்டு இருந்தும் பலரால் பயணிக்க முடியாமல் போன சம்பவம் சர்ச்சையானது.

`விழாக்காலம் என்பதால் அதிக அளவிலான பயணிகள் கூடிவிட்டனர். தகுந்த பயணச்சீட்டு இருந்தும் ரயிலில் ஏற முடியாத பயணிகளுக்கு வேறு ரயிலில் பயணச்சீட்டுகள் ஏற்பாடு செய்து தரப்பட்டன’ என இந்தச் சம்பவம் குறித்து விளக்கமளித்தது தென்னக ரயில்வே.