ANI
இந்தியா

ஆம் ஆத்மி தோற்ற கதை!

தில்லி முதல்வர் இல்லம் தொடர்பான சர்ச்சை இந்தத் தேர்தலில் முக்கியப் பங்காற்றியது.

ராம் அப்பண்ணசாமி

சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று 26 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் ஆட்சியமைக்கவுள்ளது பாஜக. தொடர்ந்து 2 சட்டப்பேரவைத் தேர்தல்களில் வெற்றி பெற்றிருந்தாலும் இந்த முறை பாஜகவிடம் ஆட்சியைப் பறிகொடுத்துள்ளது ஆம் ஆத்மி.

கடந்த பத்தாண்டுகளாக தில்லி மக்களின் மனம் கவர்ந்த கட்சியாக ஆம் ஆத்மியும் தன்னிகரற்ற தலைவரக அரவிந்த் கெஜ்ரிவாலும் இருந்த நிலையில் இந்த மாற்றம் நிகழ்ந்தது எப்படி? எங்குச் சறுக்கினார் அரவிந்த் கெஜ்ரிவால்? எவ்விதமான வியூகங்கள் வகுத்து ஆம் ஆத்மியை ஆட்சியில் இருந்து அகற்றியது பாஜக?

பத்தாண்டுகளுக்கு முன்பு தில்லியில் ஆம் அத்மி ஆட்சியைப் பிடித்தது திரைப்படக் காட்சிகளுக்கு நிகரானது என்று கூறலாம். முதல்வராக இருந்த காங்கிரஸின் ஷீலா தீட்சித்தையே தோற்கடித்து முதல்வர் ஆனவர் அரவிந்த் கெஜ்ரிவால்.

மத்திய காங்கிரஸ் ஆட்சியின்போது நடைபெற்ற ஊழல்களுக்கு எதிரான போராட்டங்களை 2011-ல் முன்னெடுத்தார் அண்ணா ஹஸாரே. அவருடன் கைகோர்த்த முன்னாள் இந்திய வருவாய் பணி அதிகாரியான அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா உள்ளிட்டோருடன் இணைந்து 2012-ல் ஆம் ஆத்மி கட்சியைத் தொடங்கி, அதன் தேசிய ஒருங்கிணைப்பாளரானார்.

2013 தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்முறையாகப் போட்டியிட்டது ஆம் ஆத்மி. அப்போது ஆளுங்கட்சியாக இருந்தது காங்கிரஸ். முதல்வராக இருந்த ஷீலா தீக்‌ஷித் தில்லியில் போட்டியிட்டார். ஆம் ஆத்மியின் முதல்வர் வேட்பாளரான அரவிந்த் கெஜ்ரிவாலும் அத்தொகுதியில் போட்டியிட்டதால் இந்தியா முழுக்கப் பரபரப்பு ஏற்பட்டது. அதெப்படி இரு முதல்வர் வேட்பாளர்கள் ஒரே தொகுதியில் போட்டியிட முடியும்?

முதல் தேர்தலிலேயே 29.49 சதவீத வாக்குகளைப் பெற்ற ஆம் ஆத்மி, 28 இடங்களில் வெற்றி பெற்றது. 2008 தேர்தலில் 40.31 சதவீதம் வாக்குகளைப் பெற்றிருந்த காங்கிரஸுக்கு, அந்தத் தேர்தலில் 8 இடங்களுடன் 24.55 சதவீத வாக்குகள் மட்டுமே பெற்று 3-வது இடத்துக்குத் தள்ளப்பட்டது.

அந்தத் தேர்தலில் பாஜக 32 இடங்களில் ஜெயித்து முதலிடம் பெற்றாலும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் ஆம் ஆத்மி ஆட்சியமைக்க காங்கிரஸ் கை கொடுத்தது. காங்கிரஸின் வாக்குகளை ஆம் ஆத்மி கபளீகரம் செய்திருந்தாலும் தில்லியில் 8 காங்கிரஸ் எம்எல்ஏக்களின் ஆதரவுடன் முதல்வர் ஆனார் அரவிந்த் கெஜ்ரிவால்.

எனினும் ஊழலுக்கு எதிரான ஜன் லோக்பால் சட்டத்தை தில்லி சட்டப்பேரவையில் நிறைவேற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஆதவளிக்காததால் 49 நாட்களில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் கெஜ்ரிவால். இதைத் தொடர்ந்து, தில்லியில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலானது. ஓராண்டு கழித்து 2015-ல் தில்லி சட்டப்பேரவைக்குத் தேர்தல் நடைபெற்றது. ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் என இத்தேர்தலிலும் மும்முனைப்போட்டி நிலவியது.

2015 தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் வாக்குகள் மேலும் வளர்ச்சியடைந்து, 54.3 சதவீத வாக்குகளுடன் 67 இடங்களில் வெற்றி பெற்றது. அதேநேரம், 9 சதவீத வாக்குகள் மட்டுமே பெற்று ஒரு இடத்தில் கூட காங்கிரஸால் வெற்றிபெற முடியவில்லை. 2-வது முறையாக தில்லி முதல்வர் ஆனார் அரவிந்த் கெஜ்ரிவால்.

இம்முறை முழுமையாக ஆட்சியமைத்தது ஆம் ஆத்மி. அடுத்ததாக வந்த 2020 தேர்தலிலும் ஆம் ஆத்மியே வெற்றி பெற்றது. பாஜகவுக்கு 2-வது இடம். இம்முறையும் காங்கிரஸ் முட்டை தான் வாங்கியது. 3-வது முறையாக தில்லி முதல்வராகப் பொறுப்பேற்றார் கெஜ்ரிவால்.

இப்படி இருமுறை அறுதிப் பெரும்பான்மையுடன் தில்லியில் ஆட்சியமைத்த அரவிந்த் ஜெக்ரிவால் இம்முறை எப்படித் தோல்வியடைந்தார்? பாஜக என்ன செய்து இந்த மாற்றத்தை ஏற்படுத்தியது.

ஆம் ஆத்மியின் தோல்விக்குப் புதிய மதுபானக் கொள்கை ஊழல் முறைகேடு வழக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. மது விற்பனை மூலம் தில்லி அரசுக்குக் கிடைக்கும் வருமானத்தை உயர்த்தும் வகையில் கடந்த நவம்பர் 2021-ல், புதிய மதுபானக் கொள்கையை நடைமுறைப்படுத்தியது அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான தில்லி அரசு.

இதை நடைமுறைப்படுத்துவதில் முறைகேடு நடைபெற்றதாக 2022-ல் தில்லி துணைநிலை ஆளுநருக்கு அன்றைய தலைமைச் செயலாளர் நரேஷ் குமார் கடிதம் எழுதினார். இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த சிபிஐ, 2023 பிப்ரவரியில் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவையும், 2024 மார்ச்சில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலையும் கைது செய்து சிறையில் அடைத்தது.

மேலும், மதுபானக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்ட முறைகேட்டால் தில்லி அரசுக்கு ரூ. 2026 கோடி இழப்பு ஏற்பட்டதாக சிஏஜி அறிக்கை அளித்தது. இதனால், மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய காங்கிரஸ் அரசின் ஊழல்களை எதிர்த்து கடந்த 2012-ல் அரசியல் கட்சி தொடங்கிய கெஜ்ரிவாலின் பிம்பம் தில்லி மக்களிடையே சரியத் தொடங்கியது.

கடந்த சில ஆண்டுகளாக காற்றுமாசு, தண்ணீர் பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்னைகள் தில்லியில் அதிகரித்தன. இவற்றுக்கான காரணமாக ஆரம்பம் முதலே மத்திய அரசை கெஜ்ரிவால் குற்றம்சாட்டி வந்தாலும், ஒரு கட்டத்தில் அது தில்லி மக்களிடையே எடுபடாமல் போனது.

குறிப்பாக, தில்லி முதல்வர் இல்லம் தொடர்பான சர்ச்சையும் இந்தத் தேர்தலில் முக்கியப் பங்காற்றியது. அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக இருந்தபோது தில்லி முதல்வர் இல்லம் ரூ. 33 கோடிக்கு புதுப்பிக்கப்பட்ட விவகாரத்தை பாஜகவும், காங்கிரஸும் கையில் எடுத்தன.

முதல்வராகும் முன்பு எளிமையாக இருந்த கெஜ்ரிவால், முதல்வர் பதவியில் இருந்தபோது கண்ணாடி மாளிகையில் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்ததாக குற்றம்சாட்டப்பட்டார். எதிர்கட்சிகளின் இந்தப் பிரசாரம் நன்கு வேலை செய்துள்ளது.

மேலும், தேர்தல் வாக்குப்பதிவுக்கு முன்பு, கடந்த பிப்.1-ல் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் மத்திய ஆண்டுக்கு ரூ. 12.75 லட்சம் வரை வருமானம் பெறுபவர்களுக்கு வருமான வரியில் இருந்து விலக்கு அளிப்பதாக அறிவிக்கப்பட்டது. இதனால் தில்லி வாழ் நடுத்தர மக்களிடையே பாஜகவுக்கான ஆதரவு வெகுவாக அதிகரித்தது.

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட ஆம் ஆத்மி, சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்து நின்றது. இது பாஜகவுக்கு வசதியாகப் போய்விட்டது. வாக்குகள் மூன்றாகப் பிரிந்தன. பல்வேறு தொகுதிகளில் ஆம் ஆத்மியின் தோல்விக்கு காங்கிரஸ் பெற்ற வாக்குகள் முக்கியக் காரணமாக இருந்துள்ளன.

அனைத்துக் காரணிகளும் ஒரே புள்ளியில் இணைந்து தில்லியில் ஆம் ஆத்மியின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளன.

மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்குகள் கெஜ்ரிவால் தலை மீது கத்தியாக தொங்குவதால், அவரது அரசியல் எதிர்காலமும் கேள்விக்குறியாகியுள்ளது.

மீண்டெழுமா ஆம் ஆத்மி? திருப்பி அடிப்பாரா அரவிந்த் கெஜ்ரிவால்? காத்திருப்போம்.