ANI
இந்தியா

சிபிஐ, அமலாக்கத்துறையை தவறாகப் பயன்படுத்துவதை நிறுத்துங்கள்: ஆம் ஆத்மி

இது குடியரசுத் தலைவரின் சொந்த உரை அல்ல. அவர் மத்திய அரசு தயாரித்த உரையை வாசிக்கிறார், எனவே இதை நாங்கள் புறக்கணிக்கிறோம்

ராம் அப்பண்ணசாமி

ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்.பி சஞ்சய் சிங் மீதான இடைநீக்க நடவடிக்கை ரத்து செய்யப்பட்டுள்ளதாக மாநிலங்களவைச் செயலகம் அறிவித்துள்ளது. கடந்து ஒரு வருடமாக மாநிலங்களவை நடவடிக்கைகளில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார் சஞ்சய் சிங்.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து தனியார் செய்தி நிறுவனத்தின் நிருபரிடம் பேசிய சஞ்சய் சிங், `மாநிலங்களவைத் தலைவர் ஜக்தீப் தங்கருக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றார்.

மேலும், `மக்களால் தேர்தெடுக்கப்பட்ட முதல்வர் (கெஜ்ரிவால்) எவ்வாறு சிறையில் அடைக்கப்படுள்ளார், எவ்வாறு அவர் சிபிஐ-யால் கைது செய்யப்பட்டார் என்பது உங்களுக்குத் தெரியும். குடியரசுத் தலைவர் உரையை நாங்கள் புறக்கணிக்கிறோம். இது குடியரசுத் தலைவரின் சொந்த உரை அல்ல. அவர் (மத்திய) அரசு தயாரித்த உரையை வாசிக்கிறார். எனவேதான் நாங்கள் குடியரசுத் தலைவர் உரையைப் புறக்கணிக்கிறோம்’ என்றார்.

குடியரசுத் தலைவர் உரையைப் புறக்கணித்த ஆம் ஆத்மி கட்சி எம்.பி.க்கள், தில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலின் கைதை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினார்கள். இந்தப் போராட்டத்தின்போது `சர்வாதிகாரம் வேலைக்கு ஆகாது’, `சிபிஐ, அமலாக்கத்துறையைத் தவறாகப் பயன்படுத்துவதை நிறுத்திங்கள்’ போன்ற பதாகைகளைக் கையில் பிடித்திருந்தனர் ஆம் ஆத்மி எம்.பி.க்கள்.

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு ஏற்கனவே சிறையில் உள்ள தில்லி முதல்வர் கெஜ்ரிவாலைக் கடந்த ஜூன் 26-ல் கைது செய்தது சிபிஐ. இதைத் தொடர்ந்து ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தின் அனுமதியுடன் ஜூன் 29 வரை சிபிஐ காவலில் வைக்கப்பட்டார் கெஜ்ரிவால்.