தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா, அவருக்கென்று ஒதுக்கப்பட்ட அரசு பங்களாவில் வசித்து வருகிறார். கடந்த மார்ச் 14 அன்று யஷ்வந்த் வர்மா வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதாகவும் தீயணைப்பு வண்டிகளுடன் வந்த தீயணைப்பு வீரர்கள் நீதிபதியின் வீட்டில் ஏராளமான பணம் இருந்ததைக் கண்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து இந்த விவகாரம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது.
உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகளை நியமிக்கும் பரிந்துரையை உச்ச நீதிமன்றத்தின் கொலீஜியம் அமைப்புதான் மேற்கொள்கிறது. இதனால் உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகளைக் கொண்ட கொலீஜியம் அமைப்பு, நீதிபதி யஷ்வந்த் வர்மாவை அவர் ஏற்கெனவே பணியாற்றிய அலஹாபாத் உயர் நீதிமன்றத்துக்கு பணியிட மாற்றம் செய்ததாகத் தகவல் வெளியானது. இத்தகவலை உச்ச நீதிமன்றம் தற்போது மறுத்துள்ளது.
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் நடந்த சம்பவம் தொடர்பாக தவறான தகவல்களும் வதந்திகளும் பரப்பப்படுகின்றன.
தகவல் கிடைத்ததும், தில்லி உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி, ஆதாரங்கள் மற்றும் தகவல்களைச் சேகரிக்கும் உள் விசாரணை நடைமுறையைத் தொடங்கினார்.
மார்ச் 20, 2025 அன்று கொலீஜியம் கூட்டத்திற்கு முன்பு தனது விசாரணையைத் தொடங்கிய தில்லி உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி, இன்று (மார்ச் 21) அன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் தனது அறிக்கையைச் சமர்ப்பிப்பார். கூடுதல் நடவடிக்கைக்காக இந்த அறிக்கை ஆராயப்படும்.
தில்லி உயர் நீதிமன்றத்தின் இரண்டாவது மூத்த நீதிபதியும் கொலீஜியத்தின் உறுப்பினருமான நீதிபதி யஷ்வந்த் வர்மா, அலஹாபாத் உயர் நீதிமன்றத்துக்கு மாற்ற முன்மொழியப்பட்டுள்ளது. அங்கு மூத்த நீதிபதிகளின் வரிசையில் 9-வது இடத்தில் இருப்பார். இந்த முன்மொழிவு, தனியானது. விசாரணை நடவடிக்கையுடன் தொடர்பில்லாதது.
இந்த முன்மொழிவை இந்திய தலைமை நீதிபதி மற்றும் உச்ச நீதிமன்றத்தின் நான்கு மூத்த நீதிபதிகள் அடங்கிய கொலீஜியம் நேற்று (மார்ச் 20) ஆய்வு செய்தது, அதன் பிறகு உச்ச நீதிமன்றத்தின் ஆலோசகர் நீதிபதிகள், சம்பந்தப்பட்ட உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகள் மற்றும் யஷ்வந்த் வர்மா ஆகியோருக்கு கடிதங்கள் எழுதப்பட்டன. கிடைக்கப்பெற்ற பதில்கள் ஆராயப்பட்டு, அதன் பிறகு, கொலீஜியம் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
1969 ஜனவரி 6-ல் தற்போது பிரயாக்ராஜ் என்று அழைக்கப்படும் அலஹாபாதில் பிறந்தவர் யஷ்வந்த் வர்மா. கடந்த 2014-ல் அலஹாபாத் உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்ட யஷ்வந்த் வர்மா, 2016 முதல் அதே உயர் நீதிமன்றத்தில் நிரந்தர நீதிபதியாகப் பணியாற்றினார். கடந்த 2021-ல் தில்லி உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.