படம்: https://x.com/Knowledge1176
இந்தியா

2,000 காலிப் பணியிடங்களுக்கு 25 ஆயிரம் பேர் குவிந்ததால் மும்பையில் பரபரப்பு

ஏற்கெனவே, குஜராத்தில் கடந்த 9 அன்று 40 காலிப் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வில் பங்கேற்க ஒரே நேரத்தில் 1,000 பேர் திரண்டிருந்தார்கள்.

கிழக்கு நியூஸ்

மும்பையில் 2,216 காலிப் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வில் பங்கேற்க 25 ஆயிரம் பேர் திரண்டதால் மும்பையில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

ஏர் இந்தியா நிறுவனம் 2,216 காலிப் பணியிடங்களுக்காக நேர்முகத் தேர்வு நடைபெறும் என்று அறிவித்திருந்தது. பழுதுபார்த்தல் மற்றும் பராமரிப்புப் பணிகளுக்காக ஜூன் 28-ல் இந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தது ஏர் இந்தியா நிறுவனம்.

இந்தப் பணிகளுக்குக் குறைந்தபட்ச கல்வித் தகுதி 10-ம் வகுப்பு என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 23 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும், மாதம் ரூ. 22,530 என்று ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேர்வாகும் பட்சத்தில் இவர்கள் 3 ஆண்டுகளுக்கு ஒப்பந்தப் பணியாளர்களாக இருப்பார்கள்.

நேர்முகத் தேர்வு நேரடியாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்ததால், மும்பை கலினா பகுதியில் வேலைக்கு விண்ணப்பிக்க 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் நேற்று திரண்டதால் அந்தப் பகுதியில் மிகப் பெரிய அளவில் கூட்டநெரிசல் ஏற்பட்டது. இதைச் சமாளிப்பதற்காக அங்கு வந்த இளைஞர்களிடம் விண்ணப்பங்களைப் பெற்றுக்கொண்டு அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டார்கள். ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் 25 ஆயிரம் பேர் கூடியதால், அங்கு சற்று பரபரப்பான சூழல் தென்பட்டது.

விமானத் தொழில் துறை பணியாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜார்ஜ் ஆப்ரஹாம் கூறுகையில், "வேலைக்கு ஆள் எடுக்கும் முறை சரியாகக் கையாளப்படவில்லை. எனக்குக் கிடைத்த தகவலின்படி, இந்த நேர்முகத் தேர்வுக்காக 50 ஆயிரம் இளைஞர்கள் வந்துள்ளார்கள். 1 கி.மீ. தூரத்துக்கு வரிசையில் நின்றுள்ளார்கள். இதன்பிறகு, தங்களுடைய விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துவிட்டு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். மக்கள் மத்தியில் வேலைவாய்ப்பின்மை இருப்பதையே இது காட்டுகிறது" என்றார்.

முன்னதாக இதேபோல் கடந்த 9 அன்று குஜராத்தில் 40 காலிப் பணியிடங்களுக்கு அறிவிக்கப்பட்ட நேர்முகத் தேர்வில் பங்கேற்பதற்காக 1,000 பேர் ஒரே நேரத்தில் திரண்டதால் கூட்டநெரிசல் ஏற்பட்டது.