ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது.
மதியம் 3 மணி நிலவரப்படி ஜார்க்கண்டில் 59.28% வாக்குகள் பதிவாகியுள்ளன.
ஜார்க்கண்டில் மொத்தமுள்ள 81 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இரு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 43 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் 17 தொகுதிகள் பொதுத் தொகுதிகள், 20 தொகுதிகள் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. 6 தொகுதிகள் தனித் தொகுதிகள். மீதமுள்ள 38 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நவம்பர் 20 அன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
அச்சுறுத்தல்கள் நிறைந்தவை எனக் கருதப்படும் வாக்குச்சாவடிகளில் மாலை 4 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைகின்றன. மற்ற தொகுதிகளில் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இந்தத் தேர்தலில் மொத்தம் 683 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இதில் 73 பேர் பெண் வேட்பாளர்கள்.
ஆளுநர் சந்தோஷ் குமார் கங்க்வார் ராஞ்சியில் வாக்களித்தார். மத்திய அமைச்சர் சஞ்சய் சேத்தும் ராஞ்சியில் தனது வாக்கை செலுத்தினார்.
இடைத்தேர்தல்:
வயநாடு நாடாளுமன்றத் தொகுதிக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. காங்கிரஸ் பொதுச்செயலர் பிரியங்கா காந்தி வதேரா தேர்தல் அரசியலில் முதன்முறையாகக் களமிறங்கியுள்ளார். இடது ஜனநாயக முன்னணி சார்பில் சத்யன் மோகெரி மற்றும் பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸ் ஆகியோர் பிரியங்கா காந்தியை எதிர்த்துப் போட்டியிட்டுள்ளார்கள். இதற்கான வாக்குப்பதிவும் காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
10 மாநிலங்களில் 31 சட்டப்பேரவைத் தொகுதிகள்:
ராஜஸ்தானில் 7 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் 6 தொகுதிகள், அசாமில் 5 தொகுதிகள், பிஹாரில் 4 தொகுதிகள், கேரளத்தில் 3 தொகுதிகள், மத்தியப் பிரதேசத்தில் 2 தொகுதிகள் மற்றும் மேகாலயா, குஜராத், சத்தீஸ்கர் மற்றும் கர்நாடகத்தில் தலா ஒரு தொகுதி என 10 மாநிலங்களில் 31 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
மதியம் 3 மணி நிலவரப்படி ஜார்க்கண்டில் 59.28% வாக்குகள் பதிவாகியுள்ளன.