கேரள மாநிலம் வயநாட்டைச் சேர்ந்த இளம்பெண் ஸ்ருதி. இவருடைய 10 ஆண்டுகால நண்பர் ஜென்சன். பள்ளிக்காலத்திலிருந்து இருவருக்கும் பழக்கம். இவர்களுக்கு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஸ்ருதி குடும்பத்தினர் 2, 3 மாதங்களுக்கு முன்பு சூரல்மலாவில் புதிய இல்லத்துக்குக் குடிபெயர்ந்தார்கள். அங்குதான் நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடைபெற்றது.
ஸ்ருதி கோழிக்கோட்டில் கணக்காளராகப் பணிபுரிந்து வந்திருக்கிறார்.
இந்த நிலையில்தான் ஜூலை இறுதியில் வயநாட்டில் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் ஸ்ருதியின் இல்லம் அடித்துச் செல்லப்பட்டது. இதில் ஸ்ருதியின் ஒட்டுமொத்த குடும்பமும் நிலச்சரிவில் அடித்துச் செல்லப்பட்டார்கள். தந்தை ஷிவன்னா, தாய் சபிதா, தங்கை ஸ்ரேயா ஆகியோர் உயிரிழந்தார்கள். புதிதாகக் கட்டப்பட்ட வீடு, திருமணத்துக்காக சேமித்து வைத்திருந்த 15 சவரன் தங்கம், ரூ. 4 லட்சம் பணமும் இதில் அடித்துச் செல்லப்பட்டன.
மீளா துயரத்திலிருந்த ஸ்ருதிக்கு ஆறுதலாக இருந்தவர் ஜென்சன்தான். குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் இழந்தாலும், தான் ஸ்ருதிக்குத் துணையாக இருப்பேன் என ஜென்சன் நம்பிக்கையளித்தார். டிசம்பரில் நடக்கவிருந்த திருமணத்தை முன்கூட்டியே நடத்த திட்டமிட்டார்கள்.
குடும்பத்தினர் உள்பட அனைத்தையும் இழந்த ஸ்ருதி பற்றி தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த பேட்டியொன்றில் பேசிய ஜென்சன், "நாங்கள் (ஜென்சன் - ஸ்ருதி) கடந்த 10 ஆண்டுகளாக நண்பர்கள். தற்போது நாங்கள் தொடக்கப் புள்ளியிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். இருந்தாலும், நாங்கள் மகிழ்ச்சியுடனே இருப்போம். எப்போதும் என் மனதுக்கு நெருக்கமாகவே இவரை (ஸ்ருதியை) வைத்திருப்பேன். எங்களுடைய கனவு ஒரு வீடும், ஸ்ருதிக்கு ஒரு வேலையும்தான். என்னுடைய மறைவுக்குப் பிறகு ஸ்ருதி தனித்துவிடப்படக் கூடாது. அவருக்கு ஒரு வேலை வேண்டும்" என்று கூறியிருந்தார்.
ஸ்ருதி கூறுகையில், "நான் தனித்துவிடப்படவில்லை என்பதை அறிந்து என் பெற்றோர்கள் மகிழ்ச்சிதான் கொள்வார்கள்" என்றார்.
ஜென்சன் தண்ணீர்த் தொட்டிகளை சுத்தம் செய்து வருபவர். பலமுறை கட்டடங்களிலிருந்து தவறி விழுந்துள்ளதால், தன் வாழ்க்கைக்குப் பிறகு ஸ்ருதி தனித்துவிடப்பட்டதாக உணரக்கூடாது என்பதாலேயே ஸ்ருதியின் வேலை மீது மிகுந்த கவனம் கொண்டிருந்தார்.
இந்த நிலையில் தான் ஜென்சன், ஸ்ருதி சென்ற ஆம்னி வேன் வயநாட்டில் கல்பேட்டா அருகில் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ஜென்சன் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார். புதன்கிழமை இரவு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
ஏற்கெனவே, குடும்பத்தினர் அனைவரையும் இழந்த ஸ்ருதி தற்போது கரம்பிடிக்கவிருந்த ஜென்சனையும் இழந்துள்ளார், அதுவும் குறுகிய இடைவெளியில். ஸ்ருதியை விடாது துரத்தும் துயரச் சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.