சபாநாயகர் ஓம் பிர்லா (கோப்புப்படம்) https://www.youtube.com/@SansadTV
இந்தியா

பிரதமருக்கு அசம்பாவிதம் நிகழ வாய்ப்பிருந்தது: சபாநாயகர் புகார் | Parliament | PM Modi |

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் பிரதமரின் உரை இன்றி நிறைவேற்றம்...

கிழக்கு நியூஸ்

நாடாளுமன்றத்தில் பிரதமருக்கு அசம்பாவிதம் நிகழ வாய்ப்பிருந்ததால் அவரை அவைக்கு வர வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதாக சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்தார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த ஜனவரி 28 அன்று குடியரசுத் தலைவரின் உரையுடன் தொடங்கியது. பின்னர் பிப்ரவரி 1 அன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2026 - 27 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தார். அதனைத் தொடர்ந்து பிப்ரவரி 2 முதல் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

ராகுல் காந்தி பேச்சால் அமளி

குறிப்பாக இதில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசியபோது முன்னாள் ராணுவ தளபதி எம்.எம். நரவனே எழுதிய புத்தகத்தில் இருந்து சீனாவின் ஆக்கிரமிப்பு குறித்த தகவல்களைச் சுட்டிக்காட்டினார். இது சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து அவையில் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். இதனால் கடந்த மூன்று நாள்களாக அவையில் அமளி நீடித்து வருகிறது.

பிரதமர் மோடியின் உரை இல்லை

இதற்கிடையில் நேற்று (பிப். 4) அன்று குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தீர்மானம் மீதான விவாதங்களுக்குப் பிரதமர் மோடி பதிலளித்துப் பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் பேசவில்லை. அதேபோல் இன்று காலையும் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகரின் இருக்கையை முற்றுகையிட்டு, பதாகைகளுடன் உறுப்பினர்கள் முழக்கமிட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது. இதற்கு மத்தியில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது குரல் வாக்கெடுப்பு நடத்தி சபாநாயகர் ஓம் பிர்லா தீர்மானத்தை நிறைவேற்றினார். அதன்பின் அவை பிற்பகல் வரை ஒத்தி வைக்கப்பட்டது.

சபாநாயகர் ஓம் பிர்லா விளக்கம்

இந்நிலையில் பிரதமருக்கு அசம்பாவிதம் நிகழ வாய்ப்பிருப்பதாக அஞ்சியதால் அவரை அவைக்கு வர வேண்டாம் என்று கூறியதாக சபாநாயகர் ஓம் பிர்லா விளக்கமளித்தார். மக்களவையில் அவர் கூறியதாவது:- அவையில் என்ன நடந்தது என்பதை நாடு நேற்று கண்டது. பிரதமரின் இருக்கையை உறுப்பினர்கள் எப்படி முற்றுகையிட்டு நின்றார்கள் என்பதை அனைவரும் பார்த்தார்கள். பிரதமருக்கு அசம்பாவிதம் நிகழலாம் என்று எனக்கு அப்போது செய்தி கிடைத்தது. மக்களவையில் அப்படிப்பட்ட சம்பவம் எதுவும் நடக்கக் கூடாது என்பதால் நான் அதை பிரதமர் மோடிக்குத் தெரிவித்து, அவரை அவைக்கு வர வேண்டாம் என்று கேட்டுக்கொண்டேன். அவை சுமூகமாக நிகழ அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். மக்களவைக்கு வராமலேயே அவர் தீர்மானத்தின் மீதான தனது ஒப்புதலை வழங்கி, விரும்பத்தகாத நிகழ்வுகள் நடப்பதைத் தடுத்துவிட்டார். அதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

பிரியங்கா காந்தி விமர்சனம்

இதையடுத்து பிரதமர் மோடி சபாநாயகருக்குப் பின்னால் ஒளிந்து கொண்டிருக்கிறார் என்று பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார். காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது: பிரதமரின் இருக்கையை மூன்று பெண்கள் சூழ்ந்து நின்று கொண்டதால் அவருக்கு அவைக்கு வந்து பதிலளிக்க துணிச்சல் இல்லாமல் போய்விட்டது. இது எப்படிப்பட்ட முட்டாள்தனம். நாடாளுமன்ற அவையில் எந்தவித விவாதமும் நடக்கவில்லை, ஏனென்றால் அரசு விவாதம் நடத்துவதை விரும்பவில்லை. சபாநாயகருக்குப் பின் சென்று பிரதமர் ஒளிந்து கொள்கிறார்.” என்றார்.

Speaker Om Birla said that he had asked the Prime Minister not to come to the House as there was a fear that something bad might happen to him in Parliament.