ANI
இந்தியா

18-வது மக்களவையின் புதிய நாடாளுமன்ற குழுக்களை நியமித்தார் சபாநாயகர் ஓம் பிர்லா

ராம் அப்பண்ணசாமி

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா 18-வது மக்களவையின் 2024-2025 நிதியாண்டுக்கான 5 நாடாளுமன்ற குழுக்களை புதிதாக அமைத்து உத்தரவிட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சி மூத்த எம்.பி. கே.சி. வேணுகோபால் அதிமுக்கியத்துவம் வாய்ந்த பொது கணக்குக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தின் வழிகாட்டுதலுக்கு இணங்க நிதி செலவிடப்படுவதை உறுதி செய்வதும், அரசு செலவினங்களில் உரிய சிக்கன நடைமுறைகளைப் புகுத்துவதும் பொது கணக்குக் குழுவின் நோக்கமாகும்.

இந்த குழுவில் மொத்தம் 15 மக்களவை எம்.பி.க்களும், 7 மாநிலங்களவை எம்.பி.க்களும் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் திமுக எம்.பி.க்கள் டி.ஆர். பாலு, திருச்சி சிவா ஆகியோரும் அடக்கம்.

ஒடிஷாவைச் சேர்ந்த பாஜக எம்.பி. பைஜயந்த் பாண்டா பொதுத்துறை நிறுவனங்கள் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தக் குழு, பொதுத்துறை நிறுவனங்களின் அறிக்கைகளையும், கணக்குகளையும், செயல்பாடுகளையும் ஆய்வு செய்யும். இந்தக் குழுவின் உறுப்பினராக திமுக எம்.பி. கனிமொழி நியமிக்கப்பட்டுள்ளார்.

மதிப்பீடுகள் குழுவின் தலைவராக பாஜக எம்.பி. சஞ்சய் ஜெய்ஸ்வால் நியமிக்கப்பட்டுள்ளார். ஓவ்வொரு மத்திய அரசுத் துறைக்கும் மத்திய பட்ஜெட் வழியாக ஒதுக்கப்படும் நிதி குறித்தும், அவை செலவிடப்படும் விதம் குறித்தும் மதிப்பீடு செய்யும் பணியை மேற்கொள்வது மதிப்பீட்டுக் குழுவின் நோக்கமாகும்.

மேலும், எஸ்.சி எஸ்.டி நலன்களுக்கான நாடாளுமன்ற குழுவின் தலைவராக பாஜக எம்.பி. ஃபக்கன் சிங் குலாஸ்தேவும், ஓபிசிக்கள் நலன்களுக்கான நாடாளுமன்ற குழுவின் தலைவராக பாஜக எம்.பி கணேஷ் சிங்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.