சேரன் அதிவிரைவு ரயில் (சென்னை-கோவை), நீலகிரி அதிவிரைவு ரயில் (சென்னை-மேட்டுப்பாளையம்), நெல்லை அதிவிரைவு ரயில் (சென்னை-திருநெல்வேலி), பொதிகை அதிவிரைவு ரயில் (சென்னை-செங்கோட்டை), சென்னை திருவனந்தபுரம் மெயில் மற்றும் சென்னை மங்களூரு அதிவிரைவு ரயில் ஆகிய பிரபல தமிழக ரயில்களில் ஸ்லீப்பர் பெட்டிகளை குறைத்து, ஏசி பெட்டிகளை உயர்த்த தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
மேற்கூறிய அனைத்து ரயில்களிலும் ஒட்டுமொத்தமாக 22 பெட்டிகள் உள்ளன. இவற்றில் உள்ள 7 முதல் 9 ஸ்லீப்பர் பெட்டிகள், 6 முதல் 7 பெட்டிகளாக குறைக்கப்படும் என்றும் அவற்றுக்குப் பதிலாக இரண்டு 3-அடுக்கு ஏசி பெட்டிகள் அல்லது ஒரு 3-அடுக்கு ஏசி பெட்டி மற்றும் 2-அடுக்கு ஏசி பெட்டி இணைக்கப்படும் என்று தகவல் தெரிவிக்கப்படுகிறது.
இதன் மூலம் இந்த ரயில்கள் ஒவ்வொன்றிலும், மலிவு விலையில் கிடைக்கும் 80 முதல் 160 ஸ்லீப்பர் படுக்கைகள், விலையுயர்ந்த 3-அடுக்கு ஏசி மற்றும் 2-அடுக்கு ஏசி படுக்கைகளாக மாற்றப்படவுள்ளன.
மேலும், இந்த நடவடிக்கை ஆகஸ்ட் முதல் வாரத்தில் இருந்து செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாண்டியன், ராக்ஃபோர்ட், சோழன் விரைவு ரயில் போன்ற தமிழகத்தின் சில பிரபலமான ரயில்களில் இதேபோன்ற மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு சில ஆண்டுகள் கழித்து, நடப்பாண்டில் மீண்டும் இத்தகைய நடைமுறை செயல்படுத்தப்படுகிறது.
மேலும், தொலைதூர ரயில்களான திருச்சி-ஹௌரா, நாகர்கோவில்-மும்பை, கன்னியாகுமரி-நிஜாமுதீன், நாகர்கோவில்-காந்திதம் மற்றும் எர்ணாகுளம்-நிஜாமுதீன் போன்றவற்றிலும் ஸ்லீப்பர் பெட்டிகளுக்கு பதிலாக ஏசி படுக்கை பெட்டிகள் இணைக்கப்படுவதாக கூறப்படுகிறது.
தெற்கு ரயில்வேயின் இந்த நடவடிக்கையால் ஸ்லீப்பர் பெட்டிகளில் உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டுகளைப் பெறுவதற்கான வாய்ப்புகள் குறையும் என்றும், நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த குடும்பங்களுக்கு பயணச் செலவுகள் அதிகரிக்கும் என்றும் கூறி, ரயில் பயணிகள் கவலை தெரிவித்துள்ளதாக செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.