2024 மக்களவைத் தேர்தலில் வாக்கு திருட்டு குறித்த எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, காங்கிரஸ் எம்.பி. சோனியா காந்தி இந்திய குடியுரிமை பெறுவதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பே வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் இடம்பெற்றதாக பாஜக குற்றம்சாட்டை முன்வைத்துள்ளது.
இத்தாலியில் பிறந்த சோனியா காந்தி இந்திய குடியுரிமை பெறுவதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, 1980-ல் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டதாக முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக எம்.பி.யுமான அனுராக் தாக்கூர் ஒரு செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறினார்.
பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவுத் தலைவர் அமித் மாளவியா, அனுராக் தாக்கூர் முன்வைத்த குற்றச்சாட்டை வழிமொழிந்துள்ளார். தனது எக்ஸ் கணக்கில் வெளியிட்ட ஒரு பதிவில், 1980-ல் புது தில்லி தொகுதிக்கு உட்பட்ட ஒரு வாக்குச் சாவடியின் வாக்காளர் பட்டியலின் நகலை அவர் பகிர்ந்தார்.
தில்லி சஃப்தர்ஜங் சாலையில் உள்ள 145-வது வாக்குச்சாவடியின் வாக்காளர் பட்டியலில் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சஞ்சய் காந்தி, சோனியா காந்தி மற்றும் மேனகா காந்தி ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. அந்த சமயம் சோனியா காந்தி இத்தாலிய குடியுரிமையை வைத்திருந்ததாக மாளவியா கூறினார்.
மேலும், `இந்த வாக்காளர் பதிவு சட்டத்தை தெளிவாக மீறும் செயலாகும், சட்டப்படி இந்திய குடிமகனாக இருக்கும் ஒருவரைத்தான் வாக்காளராகப் பதிவு செய்யவேண்டும். 1982-ல் ஏற்பட்ட போராட்டத்தைத் தொடர்ந்து, அவரது பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது 1983-ல் இடம்பெற்றது.
ஆனால் அவரது மீண்டும் சேர்க்கப்பட்டது கடுமையான கேள்விகளை எழுப்பியது. அந்த ஆண்டில் வாக்காளர் பட்டியல்களில் மேற்கொள்ளப்பட்ட புதிய திருத்தத்தில், சோனியா காந்தி வாக்குச்சாவடி 140-ல் வரிசை எண் 236-ல் பட்டியலிடப்பட்டார்.
(வாக்காளர் பட்டியலில்) பதிவு செய்வதற்கான தகுதி தேதி ஜனவரி 1, 1983 ஆகும் - இருப்பினும் அவருக்கு ஏப்ரல் 30, 1983 அன்றுதான் இந்திய குடியுரிமை வழங்கப்பட்டது’ என்றார்.
`தகுதியற்ற மற்றும் சட்டவிரோத வாக்காளர்களை முறைப்படுத்துவதில் ராகுல் காந்தி காட்டும் ஆர்வத்தையும், சிறப்பு தீவிர திருத்தத்திற்கு அவர் காட்டும் எதிர்ப்பையும், இது விளக்கலாம்’ என்றும் மாளவியா கூறியுள்ளார்.