சோனியா காந்தி (கோப்புப்படம்)
சோனியா காந்தி (கோப்புப்படம்) ANI
இந்தியா

மாநிலங்களவைத் தேர்தலில் சோனியா காந்தி: ராஜஸ்தானிலிருந்து வேட்புமனு தாக்கல்

கிழக்கு நியூஸ்

காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தி ராஜஸ்தானிலிருந்து மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடுகிறார்.

1998 முதல் 2022 வரை காங்கிரஸ் தலைவராக இருந்த சோனியா காந்தி, உத்தரப் பிரதேசத்தின் ரே பரலி தொகுதியிலிருந்து 5 முறை மக்களவைக்குத் தேர்வானார். ஏப்ரல், மே மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், சோனியா காந்தி இந்த முறை மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடுகிறார்.

ராஜஸ்தானில் மொத்தம் 10 மாநிலங்களவை இடங்கள் உள்ளன. இதில் 3 இடங்களுக்குத் தேர்தல் நடைபெறுகிறது. 200 உறுப்பினர்களைக் கொண்ட ராஜஸ்தான் சட்டப்பேரவையில் பாஜக 115 உறுப்பினர்களையும், காங்கிரஸ் 70 உறுப்பினர்களையும் கொண்டுள்ளன. இதன் காரணமாக 3 இடங்களில் இரு இடங்களை பாஜகவும், ஒரு இடத்தை காங்கிரஸும் கைப்பற்றவுள்ளன.

காங்கிரஸ் சார்பாக சோனியா காந்தி இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கலின்போது ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, முன்னாள் முதல்வர் அசோக் கெலாட், கட்சியின் மாநிலத் தலைவர் கோவிந்த் சிங் ஆகியோர் உடனிருந்தார்கள்.

பிகாரிலிருந்து அகிலேஷ் பிரசாத், ஹிமாச்சல் பிரதேசத்திலிருந்து அபிஷேக் மனு சிங்வி ஆகியோர் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடுகிறார்கள்.