PRINT-93
இந்தியா

உள்துறை அமைச்சகம் உறுதி: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்ட சோனம் வாங்சுக்!

சில வடகிழக்கு மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 6-வது அட்டவணையில் லடாக் யூனியன் பிரதேசத்தை சேர்க்க கோரிக்கை விடுத்தார்.

ராம் அப்பண்ணசாமி

லடாக் யூனியன் பிரதேசத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரி கடந்த 16 நாட்களாக மேற்கொண்ட வந்த உண்ணாவிரத்தை முடித்துக்கொண்டார் சோனம் வாங்சுக்.

கடந்த 2019-ல் அன்றைய ஜம்மு-காஷ்மீர் மாநிலம் மறுசீரமைக்கப்பட்டு, சட்டப்பேரவையுடனான ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் மற்றும் சட்டப்பேரவை இல்லாத லடாக் யூனியன் பிரதேசம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டது.

லடாக் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மத்திய அரசின் இந்த நடவடிக்கையை வரவேற்றனர். ஆனால் இத்தனை வருடங்களாக லடாக் யூனியன் பிரதேசத்தின் முன்னேற்றத்துக்கு மத்திய அரசு தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்று கூறி அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கடந்த ஒரிரு வருடங்களாக குற்றம்சாட்டி வருகின்றனர்.

மேலும் அஸ்ஸாம், திரிபுரா, மேகாலயா, மிசோரம் ஆகிய வடகிழக்கு மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 6-வது அட்டவணையில் லடாக் யூனியன் பிரதேசத்தை சேர்க்கக்கோரி, லடாக்கைச் சேர்ந்த பிரபல கல்வியாளரும், சூழலியல் செயல்பாட்டாளருமான சோனம் வாங்சுக் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்தார்.

மேலும் லடாக் யூனியன் பிரதேசத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் மத்திய அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

இந்நிலையில், லடாக்கின் சுற்றுச்சூழல் மற்றும் கலாச்சாரத்துக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், இது தொடர்பாக பிரதமரை சந்தித்து மனு அளிக்கவும், லடாக் தலைநகர் லேவில் இருந்து தில்லிக்கு கடந்த செப்.1-ல் 200 ஆதவாளர்களுடன் பாதயாத்திரையை தொடங்கினார் சோனம் வாங்சுக்.

கடந்த செப்.30-ல் பஞ்சாப்-ஹரியாணா எல்லையான சிங்குவில் வைத்து சோனம் வாங்சுக்கும், அவரது ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டு, பின்னர் அக்.2-ல் விடுவிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து லடாக் தொடர்பான கோரிக்கைகளை வலியுறுத்தி தில்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த சோனம் வாங்சுக் அளித்த விண்ணப்பம் தில்லி காவல்துறையினரால் நிராகரிக்கப்பட்டது.

அதன் பிறகு அக்.8 முதல் 23 வரை தில்லி ஜந்தர் மந்தரில் அமைதியான வழியில் போராட அனுமதிக்குமாறு தில்லி உயர் நீதிமன்றத்தில் சோனம் வாங்சுக் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மேலும் தங்களின் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளும் வரை சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கும் போராட்டத்தை தில்லியில் தொடங்கினார் சோனம் வாங்சுக்.

இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணை செயலர் நேற்று (அக்.21) சோனம் வாங்சுக்கை சந்தித்து, லடாக் யூனியன் பிரதேசத்தின் லே மற்றும் கார்கில் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதி குழுக்களுடன் டிசம்பர் மாதம், உள்துறை அமைச்சக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தவிருக்கும் தகவலை தெரிவித்து, அது தொடர்பான கடிதத்தையும் வழங்கினார்.

இதைத் தொடர்ந்து 16 நாட்களாக தான் மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக்கொண்டார் சோனம் வாங்சுக்.