இந்தியாவில் தூக்கத்தின் நேரம் குறைவது நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், வேக்ஃபிட் ஸ்லீப் இன்டெர்ன்ஷிப் (Wakefit Sleep Internship) எனும் போட்டி கடந்த 2019 முதல் 4 பருவங்களாக நடைபெற்று வருகிறது. வேக்ஃபிட் மெத்தை நிறுவனத்தால் நடத்தப்படும் தூக்கம் தொடர்புடைய ஆய்வுப் போட்டி இது.
ஒவ்வொரு முறையும் இந்தப் போட்டியில் பங்கேற்க லட்சக்கணக்கான விண்ணப்பங்கள் வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் கிடைக்கும் விண்ணப்பங்களிலிருந்து 15 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கிடையே போட்டி மாதிரி நடத்தப்படும். இவர்கள் அனைவரும் தொடர்ச்சியாக 60 நாள்களுக்கு இரவில் 9 மணி நேரம் தூங்க வேண்டும். தூக்கத்தின் தரத்தைக் கண்டறிவதே இதன் நோக்கம். வீட்டிலிருந்தபடியே இதில் பங்கெடுக்கலாம்.
ஆனால், வேக்ஃபிட் வழங்கும் மெத்தைகளையே பயன்படுத்த வேண்டும். மேலும் சில பயிற்சிகளில் பங்கெடுக்க வேண்டும். ஓய்வுக்கான பழக்கவழக்கங்களை கடைபிடிக்க வேண்டும்.
இப்போட்டியின் நான்காவது பருவத்தில் புனேவைச் சேர்ந்த பூஜா என்பவர் தினமும் 60 நாள்களுக்குத் தொடர்ச்சியாக 9 மணி நேரம் தூங்கி ரூ. 9.1 லட்சம் பரிசுத்தொகை பெற்றுள்ளார். இதில் பங்கேற்ற போட்டியாளர்கள் அனைவரும் தலா ரூ. 1 லட்சம் உதவித்தொகையாக வழங்கப்பட்டது. இவர்களில் 3 பேர் இறுதிச் சுற்றில் பங்கேற்ற நிலையில், பூஜா என்பவர் ரூ. 9.1 பரிசுத்தொகையைப் பெற்றுள்ளார்.
தற்போது இப்போட்டியின் 5-ம் பருவம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கலந்துகொள்வதற்கான விவரங்கள் www.wakefit.co/sleepintern என்கிற இணையதளத்திலும் அதன் இன்ஸ்டகிராம் பக்கத்திலும் (@wakefitco) அறிவிக்கப்பட்டுள்ளன. வெற்றியாளர் ரூ. 10 லட்சம் வரை பரிசுத்தொகை பெறலாம்.
இப்போட்டியில் பங்கேற்க குறைந்தபட்சம் 22 வயதாகியிருக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன.