வங்கதேசத்தில் நிலவி வரும் அசாதாரண சூழல் குறித்து மாநிலங்களவையில் இன்று (ஆகஸ்ட் 6) மதியம் 2.30 மணி அளவில் விளக்கமளித்தார் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்.
மாநிலங்களவையில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேசியது பின்வருமாறு:
`பல தசாப்தங்களாக இந்தியா வங்கதேசத்துக்கு இடையேயான மிக நெருங்கிய உறவு உள்ளது. தற்போது வங்கதேசத்தில் நடைபெற்று வரும் கலவரம் குறித்து அனைவருக்கும் தெரியும். கடந்த ஜனவரியில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலை அடுத்து அங்கே அசாதாரண சுழல் நிலவி வந்தது.
இந்த அசாதாரண சுழல் கடந்த ஜூன் மாதம் தொடங்கிய மாணவர் போராட்டத்தில் முடிந்தது. இந்தப் போராட்டத்தில் பொது சொத்துக்களை சேதப்படுத்தும் நடைவடிக்கைகள் நடைபெற்றன. ஜூலை மாதத்திலும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது. இந்தப் பிரச்னையை பேச்சுவார்த்தை வழியாக முடிவுக்குக் கொண்டு வர நாங்கள் வலியுறுத்தினோம்.
ஒரு கட்டத்தில் பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா வேண்டும் என்பது போராட்டக்காரர்களின் நோக்கமாக மாறியது. ஆகஸ்ட் 4-ல் பிரச்சனை தீவிரமடைந்து, காவல் நிலையங்கள் தாக்கப்பட்டன, ஆளும் கட்சி சம்மந்தப்பட்ட நபர்களின் சொத்துக்கள் சேதங்களுக்குள்ளாகின. குறிப்பாக அங்கிருக்கும் சிறுபான்மையினரின் சொத்துகளும், கோவில்களும் தாக்குதலுக்கு உள்ளாகின.
ஆகஸ்ட் 5-ல் போராட்டக்காரர்கள் டாக்காவில் குழுமினார்கள். பாதுகாப்புப் படைத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்தார் ஷேக் ஹசீனா. இதைத் தொடர்ந்து தற்காலிகமாக இந்தியாவுக்கு வர கோரிக்கை விடுத்தார் ஹசீனா. நேற்று மாலை தில்லிக்கு வந்தார்’
வங்கதேசத்தில் உள்ள இந்தியர்களிடம் அங்கிருக்கும் இந்திய தூதரங்கள் வழியாகத் தொடர்பில் இருக்கிறோம். ஏறக்குறைய 19,000 இந்தியர்கள் வங்கதேசத்தில் உள்ளனர். இதில் 9,000 பேர் மாணவர்கள். சிட்டகாங், ராஜ்ஷாஹி, குல்னா மற்றும் சில்ஹெட் ஆகிய நகரங்களில் இந்தியத் துணைத் தூதரகங்கள் உள்ளன.
வங்கதேசத்தில் உள்ள சிறுபான்மையினர் நிலையைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். நமது எல்லைப் பாதுகாப்புப்படையை விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தியிருக்கிறோம். கடந்த 24 மணி நேரமாக டாக்காவில் உள்ள வங்கதேச அதிகாரிகளிடம் தொடர்பில் இருக்கிறோம்’.