கேரள மாநிலம் கோழிக்கோட்டின் பெய்போர் கடற்கரையை ஒட்டியுள்ள கடல் பகுதியில் வைத்து, இன்று (ஜூன் 9) காலை சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த சரக்கு கப்பலான எம்வி வான் ஹை 503-ல் ஏற்பட்ட வெடிவிபத்தைத் தொடர்ந்து, கப்பல் தீப்பிடித்து எரியத் தொடங்கியது.
மத்திய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின்படி, காலை 10:30 மணியளவில் கப்பலின் கீழ் தள வெடிப்பு ஏற்பட்டதாக மும்பையில் உள்ள கடல்சார் செயல்பாட்டு மையம் (MOC) சார்பில் கொச்சியில் உள்ள அதன் கிளை அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பிறகு கடற்படையும், கடலோர காவல்படையும் விரைவான நடவடிக்கையில் இறங்கின.
தீ விபத்தைத் தொடர்ந்து, கப்பலில் இருந்த 4 ஊழியர்கள் காணாமல் போயுள்ளதாகவும், 5 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தீ விபத்தால் பாதிக்கப்பட்ட கப்பலுக்கு உதவிடும் விதமாக, ஐஎன்எஸ் சூரத் கப்பலை கொச்சியில் இருந்து இந்திய கடற்படை அனுப்பியது. மேலும் தீ விபத்து குறித்த நிலைமையை மதிப்பிடுவதற்கும், மீட்புப் பணியை ஒருங்கிணைப்பதற்கும் கொச்சியில் உள்ள ஐஎன்எஸ் கருடா தளத்தில் இருந்து சம்பவ இடத்திற்கு ஒரு டோர்னியர் விமானத்தை அனுப்ப திட்டமிடப்பட்டது.
தீயணைப்பு நடவடிக்கைகளுக்கு உதவிட இந்திய கடலோர காவல்படை கப்பல்களான ராஜ்தூத், அர்ன்வேஷ், சாஷெத் ஆகியவை சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டன.
270 மீட்டர் நீளம் கொண்ட இந்தக் கப்பல், ஜூன் 7-ல் கொழும்பிலிருந்து புறப்பட்டு மும்பையை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. ஜூன் 10-ல் மும்பையை இந்த கப்பல் சென்றடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எதிர்பாராவிதமாக தீ விபத்து நிகழ்ந்துள்ளது.
கடந்த மாதம் கேரளத்தின் ஆழப்புழா கடற்கரை ஒட்டி, 640 கொள்கலன்களுடன்கூடிய லைபீரியாவைச் சேர்ந்த சரக்கு கப்பல் நீரில் மூழ்கியது.