இந்தியா

ஹரியாணா: பாஜகவில் இணையும் காங்கிரஸ் எம்எல்ஏ, செயல் தலைவர்

கிழக்கு நியூஸ்

ஹரியாணாவில் காங்கிரஸ் மூத்த தலைவர் கிரண் சௌதரி மற்றும் அவருடைய மகன் ஷ்ருதி சௌதரி ஆகியோர் நாளை பாஜகவில் இணையவுள்ளார்கள்.

ஹரியாணா முன்னாள் முதல்வர் பன்சி லாலின் மருமகளும், காங்கிரஸ் மூத்த தலைவருமான கிரண் சௌதரி எம்எல்ஏவாக இருக்கிறார். இவருடைய மகள் ஷ்ருதி சௌதரி ஹரியாணா காங்கிரஸ் செயல் தலைவராக உள்ளார்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பிவானி-மஹேந்திரகர் தொகுதியில் ஷ்ருதி சௌதரிக்குப் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இவருக்குப் பதில் காங்கிரஸ் மூத்த தலைவர் பூபிந்தர் சிங் ஹூடாவுக்கு நெருக்கமானவராக அறியப்படும் எம்எல்ஏ ராவ் தன் சிங்குக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இவர் பாஜக எம்.பி. தரம்பீர் சிங்கிடம் தோல்வியடைந்தார்.

ஷ்ருதி சௌதரிக்கு மக்களவைத் தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படாதது அதிருப்தியைத் தந்துள்ளது. இந்த நிலையில் தானும், தனது மகளும் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

மேலும், பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், "ஷ்ருதியும், நானும் நாளை பாஜகவில் இணைகிறோம்" என்றார் கிரண் சௌதரி. அவமானத்தை எதிர்கொள்ள ஒரு எல்லை உண்டு என பூபிந்தர் சிங் ஹூடாவை இவர் விமர்சித்துள்ளார்.