மஹாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 220-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.
மஹாராஷ்டிரத்தில் சிவசேனை யாருக்கு என்ற அதிகாரப் போட்டி 2022 முதல் இருந்து வருகிறது. சிவசனை கட்சியில் பிளவை உண்டாக்கிய ஏக்நாத் ஷிண்டே, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனை கூட்டணி ஆட்சியைக் கவிழ்த்தார். பாஜகவுடன் இணைந்து கூட்டணி ஆட்சியில் முதல்வரானார் ஏக்நாத் ஷிண்டே.
இந்தப் பிளவு ஏற்பட்டதிலிருந்து மஹாராஷ்டிரத்தில் யாருடையக் கட்சிக்குப் பலம் என்ற கேள்வி இரு சிவசேனை கட்சிகளிடத்தில் இருந்துகொண்டே இருந்தது. நாடாளுமன்றத் தேர்தலில் ஷிண்டே தலைமையிலான சிவசேனை 15 இடங்களில் போட்டியிட்டு 7 இடங்களில் வெற்றி பெற்றது. உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை 21 இடங்களில் போட்டியிட்டு 9 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.
இந்தச் சூழலில்தான் மஹாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்து முடிவுகள் வெளியாகி வருகின்றன. இதிலும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை ஆதிக்கம் செலுத்தியுள்ளது.
மஹாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பாஜக 148 இடங்களிலும் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனை 81 இடங்களிலும் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 53 இடங்களிலும் போட்டியிட்டன.
எதிர் தரப்பில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை 96 இடங்களிலும் காங்கிரஸ் 104 இடங்களிலும், சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 88 இடங்களிலும் போட்டியிட்டன.
பகல் 1 மணி நிலவரப்படி 81 தொகுதிகளில் போட்டியிட்ட ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை 56 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை 19 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது.
ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை - 56 இடங்களில் முன்னிலை (81)
உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை - 19 இடங்களில் முன்னிலை (95)