இந்தியா

சிரோமணி அகாலி தளம் தலைவர் சுக்பீர் சிங் பாதல் ராஜினாமா!

18-வது மக்களவைப் பொதுத்தேர்தலில் பஞ்சாபில் உள்ள 13 மக்களவைத் தொகுதிகளில், ஒன்றை மட்டுமே அகாலி தளம் கைப்பற்றியது.

ராம் அப்பண்ணசாமி

பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் துணை முதல்வரும், சிரோன்மணி அகாலி தளம் கட்சியின் தலைவருமான சுக்பீர் சிங் பாதல் (62) தன் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

5 முறை பஞ்சாப் மாநிலத்தின் முதல்வராக இருந்த பிரகாஷ் சிங் பாதலின் மகனாவார் சுக்பீர் சிங் பாதல். தந்தைக்குப் பிறகு கடந்த 2008-ல் சிரோமணி அகாலி தளம் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றார் சுக்பீர் சிங் பாதல். இதனைத் தொடர்ந்து 2009-ல் பஞ்சாபின் துணை முதல்வராகப் பொறுப்பேற்று 2017 வரை அப்பதவியில் இருந்தார் சுக்பீர் சிங் பாதல்.

அதன் பிறகு 2017, 2022 என தொடர்ச்சியாக நடந்த இரண்டு பஞ்சாப் சட்டப்பேரவைப் பொதுத்தேர்தல்களிலும் அகாலி தளம் கட்சியால் ஆட்சியைக் கைப்பற்ற முடியவில்லை. மேலும் நடப்பாண்டில் நடைபெற்ற 18-வது மக்களவைப் பொதுத்தேர்தலில் பஞ்சாபில் உள்ள 13 மக்களவைத் தொகுதிகளில், ஒரே தொகுதியில் மட்டுமே அகாலி தளத்தின் வேட்பாளர் வெற்றி பெற்றார்.

இதைத் தொடர்ந்து சுக்பீர் சிங் பாதலின் தலைமைக்கு எதிராக பரமீந்தர் சிங் தின்சா, பீபி ஜகீர் கவுர் போன்ற அகாலி தளத்தின் மூத்த தலைவர்கள் சிலர் குரல் எழுப்பினர். இதைத் தொடர்ந்து அகாலி தளத்தின் அதிருப்தி தலைவர் சிலர் ஜலந்தரில் கூடி, கட்சித் தலைவர் பதவியை சுக்பீர் சிங் பாதல் ராஜினாமா செய்யவேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதேநேரம் சுக்பீர் சிங்குக்கு ஆதரவாக பெரும்பான்மையான அகாலி தளத்தின் மூத்த தலைவர்கள் இருந்தனர்.

இந்நிலையில், அகாலி தளம் கட்சித் தலைவர் பதவியை சுக்பீர் சிங் பாதல் ராஜினாமா செய்துள்ளதாக முன்னாள் பஞ்சாப் அமைச்சர் தல்ஜீத் சிங் சீமா தன் எக்ஸ் சமூக வலைதளக் கணக்கில் இன்று (நவ.16) அறிவித்துள்ளார். கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க அகாலி தளத்தின் செயற்குழு வரும் நவ.18-ல் கட்சியின் தலைமை அலுவலகத்தில் கூடுகிறது.