மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து ஹார்முஸ் நீரிணை வழியாக இந்தியா வந்துள்ள சரக்கு கப்பல்களில் இருந்து இறக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக கப்பல்துறை சிறப்புச் செயலாளர் ராஜேஷ்குமார் சின்ஹா தெரிவித்துள்ளார்.
தில்லியில் உள்ள வெளியுறவுத்துறை அலுவலகத்தில், வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், இந்திய கப்பல்துறை சிறப்புச் செயலாளர் ராஜேஷ்குமார் சின்ஹா, வளைகுடா நாடுகளின் இணைச் செயலாளர் அசீம் மஹாஜன் உள்ளிட்ட முக்கிய துறைகளின் அதிகாரிகள் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது ராஜேஷ்குமார் சின்ஹா கூறியதாவது:-
சமையல் எரிவாயு இறக்கும் பணிகள் தீவிரம்
“நமது கப்பல்கள் மற்றும் கடற்படையினர் அனைவரும் வளைகுடா பகுதிகளில் பாதுகாப்பாக உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில், வளைகுடா பகுதிகளில் இருந்து 161 இந்திய மாலுமிகள் திருப்பி அழைத்து வரப்பட்டுள்ளனர். இது நமது தூதரகங்கள் மற்றும் வெளியுறவுத்துறை அலுவலகங்களின் ஒருங்கிணைப்பில் நடைபெற்றிருக்கிறது. சமையல் எரிவாயு ஏற்றி வந்த நந்தா தேவி கப்பல் இன்று அதிகாலை 2:30 மணி அளவில் காண்ட்லா துறைமுகத்தை வந்தடைந்தது. தற்போது சிவாலிக், நந்தா தேவி இரு கப்பல்களில் இருந்தும் சமையல் எரிவாயு உள்ளிட்ட சரக்குகளை இறக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. நந்தா தேவி கப்பலில் இருந்து சிறிய கப்பலுக்குப் பொருள்கள் மாற்றப்பட்டுக் கரைக்குக் கொண்டு வரப்படுகின்றன.
துறைமுகத்தில் கப்பல்களின் இயக்கத்தையும் சரக்கு நடவடிக்கைகளையும் விரைவுபடுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இன்று காலையில் வெளியான ஒரு செய்தியில், ஜவஹர்லால் நேரு துறைமுகத்தில் சுமார் 450 கண்டெய்னர்கள் சாலையில் கிடப்பதாக கூறப்பட்டுள்ளது. அது எவ்வித அடிப்படையும் அற்ற பொய்ச் செய்தி என்பதைத் தெளிவுப்படுத்த விரும்புகிறேன். அனைத்து கண்டெய்னர்களும் தொழிற்சாலைகளின் சேமிப்புக் கிடங்களில் பாதுகாப்பாக இருக்கின்றன” என்றார்.
ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஆலோசனை
அப்போது பேசிய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது:-
“ஐரோப்பிய ஒன்றியத்தின் அழைப்பை ஏற்று நமது வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பிரஸ்ஸல்ஸ் சென்றார். அவர் ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் பிரதிநிதியும் துணைத் தலைவருமான கயா கல்லாஸால் அழைக்கப்பட்டிருந்தார். இந்தக் கூட்டத்தில், இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய உறவுகள் மட்டுமன்றி, உலகளாவிய சவால்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. குறிப்பாக மேற்கு ஆசியாவில் நிலவும் நிலைமை மற்றும் அதன் எரிசக்தி பாதுகாப்பு மீதான தாக்கங்கள் குறித்து ஆழமாகப் பேசப்பட்டது. அதேபோல, இந்த மோதலை விரைவில் முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய அவசியத்தையும் அமைச்சர்கள் வலியுறுத்தினர்” என்றார்.
இந்தியர்கள் காயம் அடையவில்லை
வளைகுடா நாடுகளின் இணைச் செயலாளர் அசீம் மஹாஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஓமானின் சோஹார் நகரத்தில் நடந்த சம்பவத்தில் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்த இரு இந்தியர்களின் உடல்கள் இன்று ஜெய்ப்பூரில் உள்ள அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். காயமடைந்த இந்தியர்களின் நிலையைக் கண்காணிக்கும் வகையில் மருத்துவமனைகளுடன் தூதரகம் தொடர்பில் உள்ளது. எந்த இந்தியரும் தீவிரமாக காயமடைந்ததாக தகவல் இல்லை” என்றார்.
Shipping Ministry special secretary Rajesh Kumar Sinha has said that the cargo is being discharged from both the LPG carriers, Shivalik and Nanda Devi