சரத் பவார் (கோப்புப்படம்) ANI
இந்தியா

பிரதமருக்கு நன்றி: சரத் பவார் கிண்டல்!

கிழக்கு நியூஸ்

பிரதமர் நரேந்திர மோடி சாலைப் பேரணி மேற்கொண்ட இடங்களிலெல்லாம் இண்டியா கூட்டணி வெற்றி பெற்றதால், அவருக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக சரத் பவார் கூறியுள்ளார்.

மஹாராஷ்டிரத்தில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் அணி), சிவசேனை (உத்தவ் தாக்கரே அணி) ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து மக்களவைத் தேர்தலை எதிர்கொண்டன. மொத்தமுள்ள 48 இடங்களில் காங்கிரஸ் 13 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) 8 இடங்களிலும், சிவசேனை (உத்தவ் தாக்கரே) 9 இடங்களிலும் என மஹாராஷ்டிர முன்னேற்ற முன்னணி கூட்டணி 30 இடங்களில் வெற்றி பெற்றது.

வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சரத் பவார், உத்தவ் தாக்கரே, காங்கிரஸ் மூத்த தலைவர் பிரித்விராஜ் சாவண் ஆகியோர் மும்பையில் இன்று கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தார்கள்.

உத்தவ் தாக்கரே கூறியதாவது:

"அரசியலமைப்புச் சட்டம் மற்றும் ஜனநாயகத்தைக் காப்பதற்கான தேர்தல் இது. எங்களுடன் துணை நின்று, போராட்டத்தைச் சந்தித்தவர்களுடன் முன்னோக்கி செல்வோம். சிலர் எங்களுடன் இணைய வேண்டும் என்று கூறினால், அதைப் பிறகு பார்க்கலாம்.

விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ளது. இந்தக் கூட்டணி சட்டப்பேரவைத் தேர்தலையும் சேர்ந்தே எதிர்கொள்ளும். மோடி அரசாக இருந்தது, தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாக மாறியுள்ளது. இந்த அரசு எத்தனை நாள்களுக்கு நீடிக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும்" என்றார்.

சரத் பவார் கூறியதாவது:

"பிரதமர் எங்கெல்லாம் சாலைப் பேரணி மேற்கொண்டாரோ, அங்கெல்லாம் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். எனவே, பிரதமருக்கு நன்றி தெரிவிப்பது என்னுடையக் கடமை" என்றார்.

பிரித்விராஜ் சாவண் கூறியதாவது:

"மஹாராஷ்டிர மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக நாங்கள் ஒன்றாக வந்துள்ளோம். நன்றி தெரிவிப்பதற்காகவே இந்த செய்தியாளர் சந்திப்பு. மஹாராஷ்டிரத்தில் நல்ல எண்ணிக்கையில் வாக்குகளைப் பெற்றுள்ளோம். நாங்கள் அனைவரும் ஜனநாயகத்தைக் காப்பதற்காக ஒன்றிணைந்து வந்துள்ளோம். மக்களவைத் தேர்தலில் மக்கள் எங்களுக்கு வாக்களித்ததைப்போலவே சட்டப்பேரவைத் தேர்தலிலும் மக்கள் வாக்களிப்பார்கள் என நம்புகிறேன். மஹாராஷ்டிரத்தில் ஆட்சி மாற்றம் நிகழவுள்ளது" என்றார்.