துங்கபத்ரா அணை - கோப்புப்படம் ANI
இந்தியா

கர்நாடகத்தில் துங்கபத்ரா அணையின் 7 மதகுகள் பழுது: உள்ளூர் மக்கள் பீதி! | Tungabhadra Dam | Karnataka

கடந்த 24 மணி நேரத்தில் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரை வினாடிக்கு 40,000 கன அடியில் இருந்து கிட்டத்தட்ட 90,000 கன அடியாக அதிகாரிகள் அதிகரித்தனர்.

ராம் அப்பண்ணசாமி

கர்நாடகத்தில் உள்ள முக்கியமான அணைகளின் ஒன்றான துங்கபத்ராவில் ஏழு மதகுகள் பழுதாகியுள்ளதால் அவற்றை இயக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடையே பெரும் கவலை உருவாகியுள்ளது.

அணையின் குறிப்பிட்ட ஏழு மதகுகள் செயல்படவில்லை என்பதால், அணையின் நிலையை மதிப்பிடுவதற்காக ஒரு நிபுணர் குழுவை அந்த இடத்திற்கு அதிகாரிகள் அனுப்பியுள்ளதாக மாநில நீர்வளத்துறை தகவல் அளித்துள்ளது.

மேலும், இதன் விளைவாக கடந்த 24 மணி நேரத்தில் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரை வினாடிக்கு 40,000 கன அடியில் இருந்து கிட்டத்தட்ட 90,000 கன அடியாக அதிகாரிகள் அதிகரித்துள்ளனர் மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

துங்கபத்ரா அணை அமைந்துள்ள கொப்பலில் வைத்து ஊடகங்களுக்கு பேட்டி அளித்த மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவராஜ் தங்கடகி, ஏழு மதகுகள் செயல்படாமல் போய்விட்டதாகவும், அவற்றைத் திறக்க முடியாததால் அவசரமாக பழுதுபார்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டதாகவும் கூறினார்.

அணை தொடர்பாக பலமுறை முறையிட்ட போதிலும், மத்திய நீர் ஆணையம் சரியான நேரத்தில் நடவடிக்கை எடுக்கத் தவறியதாக விவசாயிகள் விமர்சித்துள்ளனர் என்று இது தொடர்பாக இந்தியா டுடே வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.

பாசனத்திற்காக அணையை நம்பியுள்ள கர்நாடகம், ஆந்திரம் மற்றும் தெலுங்கானா ஆகிய மூன்று மாநிலத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு இடையே இந்த செய்தி பீதியைத் தூண்டியுள்ளது. மிகவும் குறிப்பாக, உள்ளூர் மக்களிடையே இது கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் கடந்தாண்டு இதேபோன்ற ஒரு நிகழ்வில் மதகு எண் 19-ன் சங்கிலி அறுந்ததால், அது ஆற்றில் விழுந்தது.