இந்தியா

தில்லியில் குண்டுவெடிப்பு: பாதுகாப்பு அமைப்புகள் விசாரணை!

குண்டு வெடிப்புக்குப் பிறகு, சம்பவ இடத்தில் இருந்து வெள்ளை நிற புகை மேலெழும் காணொளி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

ராம் அப்பண்ணசாமி

தில்லி இன்று (நவ.28) காலை ஏற்பட்ட குண்டுவெடிப்பை அடுத்து, சம்பவ இடத்தில் பாதுகாப்பு அமைப்புகள் விசாரணை நடத்தி, ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

தலைநகர் தில்லியின் வடமேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த பகுதி பிரஷாந்த் விஹார். இன்று காலை பிரஷாந்த் விஹாரின் பி.வி.ஆர் திரையரங்கத்தை ஒட்டி அமைந்துள்ள டி.டி.ஏ. பூங்காவுக்கு அருகே குண்டு வெடித்துள்ளது. குறிப்பாக அங்கிருக்கும் பன்சி வாலா இனிப்பகத்தை ஒட்டி அமைந்திருந்த டி.டி.ஏ. பூங்காவின் சுற்றுச் சுவருக்கு வெளியே குண்டு வெடிப்பு நடந்துள்ளது.

குண்டு வெடிப்புக்குப் பிறகு, சம்பவ இடத்தில் இருந்து வெள்ளை நிற புகை மேலெழும் காணொளி சமூக வலைதளங்களில் விரைவாக பகிரப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து தில்லி காவல்துறையினருடன், தடயவியல் துறையினர் உள்ளிட்ட பிற பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிஷ்டவசமாக இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தால் உயிரிழப்பும், யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை. குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து சரியாக காலை 11.48 மணிக்குத் தங்களுக்கு தகவல் கிடைத்ததாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்தாக ஏ.என்.ஐ. நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த அக்.20-ல் இதே பிரஷாந்த் விஹார் பகுதியில் இருக்கும் சி.ஆர்.பி.எஃப். பள்ளியின் சுற்றுச் சுவருக்கு வெளியே குண்டுவெடித்தது. அந்த குண்டுவெடிப்பு சம்பவத்தால் உயிரிழப்பும், யாருக்கும் எந்தவித காயமும் எதுவும் ஏற்படவில்லை. முதற்கட்ட விசாரணையில் வெடித்தது நாட்டு வெடிகுண்டாக இருக்கலாம் என தகவல் வெளியானது.