இந்தியாவின் 79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, `ஃப்ரீடம் சேல்’ திட்டத்தை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவித்துள்ளது. இதன் கீழ் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களில் ரூ. 1,279-க்கு தொடங்கி சுமார் 50 லட்சம் இருக்கைகள் வழங்கப்படுகின்றன.
ஆகஸ்ட் 19, 2025 முதல் மார்ச் 31, 2026 வரையிலான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான பயணங்களுக்கு நேற்று (ஆகஸ்ட்) தொடங்கி ஆகஸ்ட் 15 வரை பயணச்சீட்டு முன்பதிவுகள் திறந்திருக்கும் என்று விமான நிறுவனம் வெளியிட்ட ஒரு அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
`ரூ. 1,279 முதல் உள்நாட்டு விமானங்களிலும், ரூ. 4,279 முதல் சர்வதேச விமானங்களிலும் தொடங்கும் இந்த பயணச்சீட்டு விற்பனை, புதிய இந்தியாவில் சுதந்திரம், இணைப்பு மற்றும் அணுகலைக் கொண்டாடும்’ என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த விற்பனைக்கான முன்பதிவு நேற்று (ஆக. 11) முதல் www.airindiaexpress.com இணையதளம் மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மொபைல் செயலியில் பிரத்தியேகமாகத் தொடங்கியுள்ளது.
இன்று (ஆகஸ்ட் 11) முதல் ஆகஸ்ட் 15 வரை அனைத்து முக்கிய விமான பயணச்சீட்டு முன்பதிவு தளங்கள் வாயிலாகவும் இந்த திட்டத்தின் கீழ் பயணச்சீட்டுகள் கிடைக்கும் என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
`இந்த சலுகையின் கீழ் ஆகஸ்ட் 19, 2024 முதல் மார்ச் 31, 2026 வரை பயணம் செய்யலாம், இந்தியாவின் மிகவும் துடிப்பான பண்டிகைக் காலமான ஓணம், துர்கா பூஜை, தீபாவளி, கிறிஸ்துமஸ் மற்றும் பலவற்றை இது உள்ளடக்கியுள்ளது’ என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், பயணிகளின் தனிப்பட்ட விருப்பங்களுக்கு ஏற்ப விமான பயணச்சீட்டு கட்டணங்களை வழங்குவதாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது. `எக்ஸ்பிரஸ் லைட்’, `எக்ஸ்பிரஸ் வேல்யூ’ எனப் பல்வேறு விருப்பத் தேர்வுகளின் கீழ் உள்நாட்டு, சர்வதேச விமானங்களில் பயணச்சீட்டு விற்பனை தொடங்குகின்றது.