உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம் ANI
இந்தியா

பாபா ராம்தேவ் நேரில் ஆஜராக வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

கிழக்கு நியூஸ்

பதஞ்சலி ஆயுர்வேதம் விளம்பரங்கள் தவறாக வழிநடத்துவதற்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பதிலளிக்காததைத் தொடர்ந்து, பாபா ராம்தேவ் நேரில் ஆஜராக வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தடுப்பூசி மற்றும் நவீன மருந்துகளுக்கு எதிராக பாபா ராம்தேவ் மேற்கொள்ளும் விளம்பர பிரசாரங்களுக்கு எதிராக இந்திய மருத்துவச் சங்கம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 27-ல், உங்கள் மீது ஏன் அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளக் கூடாது என பதஞ்சலிக்கு எதிராக உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்தது. எந்தவொரு மருத்துவ முறைக்கு எதிராகவும் எந்தவொரு கருத்தையும் முன்வைக்கக் கூடாது என்றும் பதஞ்சலி நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டது. இதுதவிர, இதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன் மத்திய அரசை நோக்கியும் உச்ச நீதிமன்றம் கேள்வியெழுப்பியது.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பதஞ்சலி நிறுவனம் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்படவில்லை. மேலும், முந்தைய உத்தரவுக்குப் பிறகும் பதஞ்சலி சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றுள்ளது. இதைக் கவனத்தில் எடுத்துக்கொண்ட உச்ச நீதிமன்றம், பதஞ்சலி நிறுவனத்தின் இணை நிறுவனர் பாபா ராம்தேவ் மற்றும் மேலாண் இயக்குநர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா ஆகியோர் நேரில் ஆஜராக வேண்டும் என அழைப்பாணை பிறப்பித்துள்ளது.