கோப்புப்படம் ANI
இந்தியா

நியூஸ்கிளிக் ஆசிரியரை உடனடியாக விடுவிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம்

கிழக்கு நியூஸ்

நியூஸ்கிளிக் செய்தி நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை ஆசிரியருமான புர்கயஸ்தாவை உடனடியாக விடுவிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இவரைக் கைது செய்ததில் தில்லி காவல் துறை முறையான நடைமுறைகளைப் பின்பற்றாததால் கைது செய்தது செல்லாது என்று கூறி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பிஆர் கவாய், சந்தீப் மேத்தா ஆகியோர் உத்தரவிட்டார்கள். வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், பிணை மூலம் விடுவிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, தில்லி சிறப்பு நீதிமன்ற புர்கயஸ்தாவுக்கு நிபந்தனையுடன் கூடிய பிணை வழங்கியது. நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல் வெளிநாடுகளுக்குச் செல்லக் கூடாது, சாட்சியங்களையும், ஒப்புதல் வாக்குமூலம் அளித்தவர்களிடமும் பேசக் கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

சீனாவுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்வதற்காகப் பணம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, தில்லி காவல் துறை சிறப்புப் பிரிவால் புர்கயஸ்தா கடந்த அக்டோபர் 3-ல் கைது செய்யப்பட்டார்.

சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கு எதிராக புர்கயஸ்தா உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.