நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா, ஏ.எஸ். சந்துர்கர் ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு, இந்த விவகாரம் மிகவும் நுட்பமானது என்று குறிப்பிட்டு, ஓரணியில் தமிழ்நாடு ஓடிபி விவகாரம் தொடர்பாக திமுக தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை இன்று (ஆக. 4) தள்ளுபடி செய்தது.
கடந்த ஜூலை 21 அன்று, திமுகவின் `ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்திற்கு’ ஓடிபி சரிபார்ப்பு முறையை பயன்படுத்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தடை உத்தரவைப் பிறப்பித்தது. இந்த விஷயம் தரவு பாதுகாப்பு மற்றும் தனியுரிமையின் அம்சங்களை உள்ளடக்கியது என்றும், இது நீதிமன்றத்தால் ஆராயப்படவேண்டும் என்றும் கூறியது.
சிவகங்கை மாவட்டம் டி. அதிகரை கிராமத்தைச் சேர்ந்த எஸ். ராஜ்குமார் தாக்கல் செய்த பொது நல வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் இந்த தடை உத்தரவை பிறப்பித்தது.
‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற போர்வையில் திமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் அவரவர் பகுதியில் உள்ள பொதுமக்களிடமிருந்து தனிப்பட்ட மற்றும் ஆதார் விவரங்களை சேகரித்து வருவதாக மனுவில் கூறப்பட்டிருந்தது.
மக்களிடம் இருந்து தனிப்பட்ட தரவுகள் சேகரிக்கப்படுவதால், தனியுரிமை மற்றும் தரவு பாதுகாப்பிற்கான உள்கட்டமைப்பு குறித்து இந்த பொதுநல வழக்கு கடுமையான கவலைகளை எழுப்புகிறது என்று உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது.
திமுக சார்பில் இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
மேல்முறையீட்டு வழக்கு விசாரணையின்போது திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி. வில்சன், ஆதார் விவரங்களை கட்சி சேகரிக்கவில்லை என்று குறிப்பிட்டார். இந்த விவகாரத்தில் வாதி தரப்பால் எந்தத் தடையும் கோரப்படாததால், உயர் நீதிமன்றம் தவறாக தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது என்று அவர் வாதிட்டார்.
`எனது முழு திட்டமும் ஸ்தம்பித்துவிட்டது. 1.7 கோடி உறுப்பினர்கள் தகவலை வழங்கியுள்ளனர். பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சி போன்ற பிற கட்சிகள் செய்ததையே நானும் செய்கிறேன். ஆதார் விவரங்களை நான் சேகரிக்கவில்லை’ என்று வில்சன் கூறினார்.
இந்த விசாரணையின்போது முழு செயல்முறையும் சந்தேகத்திற்குரியது என்று கூறிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள், `நீதிமன்றம் குடிமக்களைப் பாதுகாக்கவேண்டும். உயர் நீதிமன்றத்திற்குத் திரும்பிச் செல்லுங்கள். இந்த விஷயத்தில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. தள்ளுபடி செய்யப்பட்டது’ என்று குறிப்பிட்டு, திமுக சார்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்தனர்.