இந்தியா

தி ரன்வீர் ஷோ நிகழ்ச்சியை மீண்டும் தொடங்கலாம்: உச்ச நீதிமன்றம் அனுமதி

அனைத்துத் தரப்பு வயதினரும் பார்க்கும் வகையில் கண்ணியமாக இருக்க வேண்டும் என்று நிபந்தனை.

கிழக்கு நியூஸ்

பிரபல யூடியூபர் ரன்வீர் அல்லாபாடியா அவருடைய தி ரன்வீர் ஷோ நிகழ்ச்சியை மீண்டும் தொடங்கலாம் என உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

சமய் ரைனா யூடியூப் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட ரன்வீர் அல்லாபாடியா, சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கருத்து சமூக ஊடகங்களில் அதிகம் பரவியது. தனது கருத்துக்கு ரன்வீர் அல்லாபாடியா மன்னிப்பும் கோரினார்.

எனினும், ரன்வீர் அல்லாபாடியா மீது மஹாராஷ்டிர சைபர் பிரிவு, குவஹாத்தி மற்றும் ஜெய்ப்பூரில் என பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இவற்றுக்கு எதிராக ரன்வீர் அல்லாபாடியா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், ரன்வீர் அல்லாபாடியாவைக் கடுமையாக சாடியது. எனினும், கைது நடவடிக்கையிலிருந்து உச்ச நீதிமன்றம் அவருக்குப் பாதுகாப்பு வழங்கியது. மேற்கொண்டு நிகழ்ச்சிகளில் எதிலும் பங்கேற்கக் கூடாது, ஈடுபடக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டிருந்தது.

இதனிடையே, ரன்வீர் அல்லாபாடியா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தி ரன்வீர் ஷோ நிகழ்ச்சியை மீண்டும் தொடங்குவதற்கு அனுமதி கோரியிருந்தார். இந்நிகழ்ச்சி, 280 ஊழியர்களின் வாழ்வாதாரம் சம்பந்தப்பட்டது என்றும் அவர் தனது மனுவில் தெரிவித்திருந்தார்.

இவருடையக் கோரிக்கையை ஏற்று, தி ரன்வீர் ஷோ நிகழ்ச்சியை மீண்டும் தொடங்க உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மேலும், இவருடைய நிகழ்ச்சியை அனைத்துத் தரப்பு வயதினரும் பார்க்கும் வகையில் கண்ணியமாக இருக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் நிபந்தனை வழங்கியுள்ளது.