PRINT-135
இந்தியா

பீஹார் இட ஒதுக்கீடு ரத்து செல்லும்: உச்ச நீதிமன்றம்

பீஹார் மாநிலத்தில் அமலில் இருந்த இடஒதுக்கீடு கடந்த நவம்பர் 2023-ல், 50 சதவீதத்திலிருந்து 75 சதவீதமாக உயர்த்தப்பட்டது

ராம் அப்பண்ணசாமி

பீஹார் அரசு உயர்த்திய அம்மாநில இட ஒதுக்கீட்டை பாட்னா உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. இந்நிலையில் பாட்னா உயர் நீதிமன்றத்தின் ரத்து நடவடிக்கையை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்.

பீஹார் மாநிலத்தில் அமலில் இருந்த இடஒதுக்கீட்டை முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான அரசு கடந்த நவம்பர் 2023-ல், 50 சதவீதத்திலிருந்து 75 சதவீதமாக உயர்த்தியது. இதை எதிர்த்து பாட்னா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கின் விசாரணை முடிந்து, ஜூன் 20 தீர்ப்பு வழங்கிய பாட்னா உயர் நீதிமன்றம், பீஹார் அரசால் இட ஒதுக்கீடு உயர்த்தப்பட்டது அரசியலமைப்பு சட்டப் பிரிவுகள் 14, 15 மற்றும் 16 ஆகியவைக்கு எதிரானது என்று கூறி அதை ரத்து செய்தது. இதைத் தொடர்ந்து பாட்னா உயர் நீதிமன்றத்தின் முடிவை எதிர்த்து கடந்த ஜூலை 2-ல் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது பீஹார் அரசு.

இந்த வழக்கு மீதான விசாரணையில், `பாட்னா உயர்நீதிமன்றத்தின் உத்தரவு செல்லும். அந்த உத்தரவு மீது இடைக்காலத் தடை விதிக்க முடியாது. பீஹார் அரசு தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணை செப்டம்பர் மாதம் விரிவாக நடைபெறும்’ என்று அறிவித்தது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு.

பீஹார் அரசு அம்மாநிலத்தில் அமலில் இருந்த 50 சதவீத இட ஒதுக்கீட்டை 75 சதவீதமாக உயர்த்தியது. இந்த 75 சதவீத இட ஒதுக்கீட்டில், 10 சதவீதம் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கும், 43 சதவீதம் பிற்படுத்தப்பட்டோருக்கும், 20 சதவீதம் பட்டியல் சாதியினருக்கும், 2 சதவீதம் பழங்குடியினருக்கும் ஒதுக்கப்பட்டது.