உச்ச நீதிமன்றம் (கோப்புப்படம்) 
இந்தியா

என்.சி.இ.ஆர்.டி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியது மத்திய அரசு | NCERT |

துறை சார்ந்த நடவடிக்கை எடுப்பது சிறிய செயல்பாடு. அவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் நீதித்துறையே இன்று ரத்தம் சிந்துகிறது...

கிழக்கு நியூஸ்

நீதித்துறையில் ஊழல் இருப்பதாகச் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டிருந்த தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கழகத்தின் எட்டாம் வகுப்பு பாடப் புத்தகங்களுக்குத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சமீபத்தில் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கழகத்தால் வெளியிடப்பட்ட எட்டாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இந்திய நீதித்துறையில் ஊழல் இருப்பதாகவும், வழக்குகள் முடிவடைய நீண்ட காலம் எடுப்பதாகவும் கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.

மூத்த வழக்கறிஞர்கள் கண்டனம்

இதையடுத்து, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி முன்னிலையில் நேற்று (பிப். 25) மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், ஏ.எம். சங்க்வி மற்றும் முகுல் ரோட்டகி ஆகியோர் தங்கள் கண்டனங்களை இன்று பதிவு செய்தனர். எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நீதித்துறையில் ஊழல் நிலவுவது குறித்துப் பயிற்றுவிக்கப்படுவதைக் கண்டு, நீதிமன்றத்தின் உறுப்பினர்களாகிய நாங்கள் மிகுந்த மனவேதனை அடைகிறோம். இது என்.சி.இ.ஆர்.டி பாடப்புத்தகத்தின் ஒரு பகுதியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் மாண்பைக் காப்பதில் எங்களுக்குப் பெரும் பங்கு உள்ளது; இது முற்றிலும் அவதூறான செயலாகும். அந்தப் பாடப்புத்தகத்தின் பிரதிகள் எங்களிடம் உள்ளன.” என்று மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வருத்தம் தெரிவித்தார்.

தலைமை நீதிபதி ஆவேசம்

இதனைக் கேட்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதி ஜோதிமால்ய பக்சி அடங்கிய அமர்வு இவ்வழக்கைத் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் என்று கூறியது. அப்போது பேசிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த், “இது ஒட்டுமொத்த நீதித்துறையையும் சார்ந்தது என்பதில் சந்தேகமில்லை. வழக்கறிஞர்களும் நீதிபதிகளும் இதனால் பெரும் கவலையடைந்துள்ளனர். இந்த அமைப்பில் உள்ள ஒவ்வொரு தரப்பினரும் உண்மையில் கலக்கமடைந்துள்ளனர்; இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரிக்கும். ஒரு நாள் பொறுத்திருங்கள். உலகின் எந்தவொரு சக்தியும் நீதித்துறையின் நேர்மையைக் களங்கப்படுத்தவோ அல்லது அவதூறு பரப்பவோ நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்” என்று தெரிவித்தார்.

உச்ச நீதிமன்றத்தில் விசாரணை

அதனடிப்படையில் தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜோதிமால்ய பக்சி, விபுல் எம். பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணைக்கு எடுத்தது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான சாலிசிட்டர் ஜென்ரல் துஷார் மேத்தா, எட்டாம் வகுப்புப் பாடப்புத்தகத்தில் நீதித்துறையில் ஊழல் இருப்பதாக பதிவு செய்யப்பட்டுள்ள கருத்தை தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கழகம் நீக்கியுள்ளது. இதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோரப்பட்டுள்ளது. இக்கருத்தை எழுதியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை 32 புத்தகங்கள் மட்டுமே சந்தைக்கு வந்துள்ளன. அவற்றையும் திரும்பப் பெற்றுவிட்டார்கள். இதேபோல் தாமதிக்கப்பட்ட நீதி என்பது மறுக்கப்பட்ட நீதி” என்ற தலைப்பிலான பகுதியும் உள்ளது. நாம் நமது பிள்ளைகளுக்கு நீதி தாமதிக்கப்படுகிறது என்று சொல்லிக் கொடுக்கக் கூடாது. நீதித்துறை குறித்த சர்ச்சைக்குரிய பகுதி திருத்தப்பட்டு புத்தகம் வெளியாகும். அதை நானும் சரிபார்ப்பேன்.” என்றார்.

நீதித்துறை ரத்தம் சிந்துகிறது

இதனைக் கேட்ட தலைமை நீதிபதி சூர்ய காந்த் கூறியதாவது:-

”தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கழகத்தின் அறிக்கையில் மன்னிப்பு கோருவதாக எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை. இது நீதித்துறையை இழிவுபடுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட மிகவும் ஆழமான, திட்டமிடப்பட சர்ச்சை. நீதித்துறையின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் நான் இதைச் செய்தது யார் என்பதைக் கண்டறிய வேண்டும். இதற்கு யார் பொறுப்பு என்பது எனக்குத் தெரிய வேண்டும். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்வரை நான் இந்த வழக்கு முடித்து வைக்கப்படாது. சம்பந்தப்பட்டவர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுப்பது என்பது சிறிய அளவிலான செயல்பாடுதான். அவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் நீதித்துறையே இன்று ரத்தம் சிந்துகிறது” என்றார்.

புத்தகங்களுக்குத் தடை உத்தரவு

அதன்பின் நீதிபதிகளின் அமர்வு வெளியிட்ட உத்தரவில், சர்ச்சைக்குரிய கருத்துகள் இடம்பெற்றுள்ள எட்டாம் வகுப்பு புத்தகங்கள் முற்றிலுமாக தடை செய்யப்பட வேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும் இணையதளத்தில் இருந்து இது தொடர்பான மென்பிரதிகள் அனைத்தும் நீக்கப்பட வேண்டும். இவற்றைப் பகிர்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இந்தப் புத்தகம் அனுப்பப்பட்டுள்ள பள்ளிகளுக்குச் சென்று புத்தகங்களை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டியது என்.சி.இ.ஆர்.டி இயக்குநர் மற்றும் முதல்வரின் பொறுப்பு. இது தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை 2 வாரங்களில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். மேலும், இந்தப் பகுதிகளை உருவாக்கியவர்களின் பெயர்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.

இந்த சர்ச்சைக்குரிய பாடத்தை எழுதியவர்கள் யார், எதன் அடிப்படையில் இந்தப் பகுதிகள் சேர்க்கப்பட்டன என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசுக்கும், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கழகத்திற்கும் நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

Supreme Court Bans NCERT Textbook With Chapter On Judicial Corruption, Issues Contempt Notice To NCERT Director & Ministry Official