ANI
இந்தியா

சமய் ரெய்னா உள்ளிட்டோர் மன்னிப்பு கேட்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் | Samay Raina

"அனைவரது உரிமையும் கண்ணியமும் பாதுகாக்கப்படும் வகையில்..."

கிழக்கு நியூஸ்

குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து கொச்சையாகப் பேசியது தொடர்பாக யூடியூபர்கள் சமய் ரெய்னா உள்ளிட்டோர் மன்னிப்பு கேட்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தண்டுவட தசைநார் சிதைவு நோய் என்ற அரிதான நோயால் பாதிக்கப்பட்ட 2 மாத குழந்தை பற்றி ஸ்டான்ட் அப் நகைச்சுவைக் கலைஞர் சமய் ரெய்னா சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக எஸ்எம்ஏ தொண்டு நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நோயால் பாதிக்கப்பட்டவர்களின் உரிமை மற்றும் கண்ணியத்தைப் பாதுகாக்க, அவர்களை இழிவுபடுத்தும் வகையில் பேசும் கருத்துகளை டிஜிட்டல் ஊடகங்களில் ஒளிபரப்ப மனுவில் தடை கோரப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், யூடியூபர்களான சமய் ரெய்னா, விபுல் கோயல், பல்ராஜ் பரம்ஜீத் சிங், நிஷாந்த் ஜெகதீஷ் தன்வர் மற்றும் சோனாலி தாக்கர் ஆகியோர் தங்களுடைய யூடியூப் சேனல்களில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

அனைவரது உரிமையும் கண்ணியமும் பாதுகாக்கப்படும் வகையில், டிஜிட்டல் ஊடகங்களுக்கு வழிமுறைகளை வகுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இன்று பாதிக்கப்பட்டவர்கள் நாளை யாரோ என உச்ச நீதிமன்ற நீதிபதி சூர்யகாந்த் தெரிவித்தார். மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் வெங்கட்ரமணி, வழிமுறைகளுக்கான வரைவு தாக்கல் செய்யப்படும் என்றார்.

மே 5-ல் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, இந்த வழக்கில் யூடியூபர்கள் அனைவரும் இன்று நேரில் ஆஜரானார்கள். இந்த வழக்கானது அடுத்த விசாரணைக்காக நவம்பருக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Samay Raina | Supreme Court