படம்: எக்ஸ் தளம்|காங்கிரஸ்
இந்தியா

'ஜனநாயகத்தைப் பாதுகாப்போம்': எதிர்க்கட்சிகள் போராட்டம்

சுவாமிநாதன்

நாடாளுமன்றத்திலிருந்து 146 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து ஜனநாயகத்தைப் பாதுகாப்போம் என்கிற தலைப்பில் 'இந்தியா' கூட்டணி தலைவர்கள் தில்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நேற்று (வியாழக்கிழமை) தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தொடரிலிருந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 146 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டார்கள். இதைக் கண்டித்து 'இந்தியா' கூட்டணி தலைவர்கள் தில்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, சசி தரூர், திமுக எம்.பி. திருச்சி சிவா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளார்கள்.

சரத் பவார் கூறுகையில், ஜனநாயகத்தைப் பாதுகாக்க எதிர்க்கட்சியினர் எதையும் செய்யத் தயாராக இருப்பதாகக் கூறினார்.

காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கூறியதாவது:

"உலகிலேயே ஜனநாயக வரலாற்றில், 146 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது இல்லை. ஜனநாயகம் அபாயகரமான நிலையில் இருப்பதை மக்கள் உணர வேண்டும். நடக்கும் அனைத்தும் நாட்டின் எதிர்காலத்துக்கு நல்லதல்ல என்பதை மக்களிடம் சொல்லவே இந்தப் போராட்டம். இதற்கு ஒரே தீர்வு, மத்தியில் ஆட்சியை மாற்றி 'இந்தியா' கூட்டணியை அதிகாரத்துக்குக் கொண்டு வர வேண்டும்" என்றார்.

காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி கூறுகையில், "நாட்டின் ஜனநாயகத்தைக் காக்க, அனைத்து தேசிய அமைப்புகளும் ஒன்றிணைந்து ஒற்றைக் குரலில் ஒலிக்க வேண்டும்" என்றார்.